
அகர்தலா:
திரிபுரா மாநிலத்தின் முதல்வராக வெள்ளிக்கிழமை நேற்று பதவி ஏற்றுக் கொண்டார் அம்மாநில பாஜக., தலைவர் பிப்லப் குமார் தேப். இந்நிலையில், அங்கே திடீர் திகிலைக் கிளப்பியுள்ளார், பாஜக., தலைவர் ஒருவர்.
திரிபுரா மாநில சட்டப் பேரவைக்கு நடந்து முடிந்த தேர்தலில் பாஜக-ஐபிஎஃப்டி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து கால் நூற்றாண்டுகளாக ஆண்டு வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரிகளின் ஆட்சி முடிவுக்கு வந்தது.
இதை அடுத்து திரிபுராவின் 10ஆவது முதல்வராக பாஜக., தலைவர் பிப்லப் குமார் தேப் வெள்ளிக்கிழமை பதவியேற்றுக் கொண்டார். அவரது பதவி ஏற்பு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் உள்ளிட்டோர் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று ஒரு திகிலைக் கிளப்பியுள்ளார் பாஜக., தலைவர் சுனில் தியோதர். இவர், திரிபுராவில் பாஜக., வெற்றி பெறக் காரணமான பாஜக., தலைவர்கள் நான்கு பேரில் ஒருவர். பாஜக.,வைச் சேர்ந்த அமைச்சர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இல்லங்களில் முதலில் கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்திய பின்னர் குடியேற வேண்டும் என்று சுனில் தியோதர் கூறியுள்ளது இப்போது பரபரப்பாகப் பேசப் படுகிறது.
I request @BjpBiplab, new CM of Tripura, to get septic tanks of all minister quarters cleaned before occupying them. It should be recollected that a woman’s skeleton was found in septic tank of Ex CM Manik Sarkar’s quarter on Jan 4, 2005 but the case was deliberately suppressed.
— Sunil Deodhar (@Sunil_Deodhar) March 10, 2018
இது தொடர்பாக அவர் கூறிய பரபரப்பு குற்றச்சாட்டு என்னவென்றால், கடந்த 2005-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் மாணிக் சர்கார் வீட்டின் கழிவுநீர்த் தொட்டியில் இருந்து ஒரு பெண்ணின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. எனவே கடந்த 25 ஆண்டுகளாக பதவியில் இருக்கும் கம்யூனிஸ்ட்கள், அரசியல் தொடர்பாக பல கொலைகளைச் செய்திருக்கக்கூடும். எனவே நான் முதல்வர் பிப்லப் குமார் தேபுக்கு வைக்கும் வேண்டுகோள் என்னவென்றால், நீங்களும், மற்ற அமைச்சர்களும் உங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இல்லங்களில் குடியேறும் முன் அங்குள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யுங்கள் என்பதே.. என்று கூறியுள்ளார்.
சுனில் தியோதரின் இந்தப் பேச்சு இப்போது திரிபுராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



