
கடந்த ஏப். 22ம் தேதி காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் சுற்றுலா சென்றிருந்த 26 அப்பாவி ஆண்கள் உயிரிழந்தனர். அப்போது, அங்கிருந்த பெண்களிடம், “போய் மோடியிடம் சொல்” என்று பயங்கரவாதிகள் எச்சரித்துவிட்டு சென்றனர்.
இந்த தகவல் பெரிய அளவில் பேசப்பட்ட நிலையில், சம்பவம் குறித்து கேள்விப்பட்ட பிரதமர் மோடி தனது சவுதி அரேபியா நாட்டு சுற்றுப்பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு அவசர அவசரமாக நாடு திரும்பி அன்று இரவே விமான நிலையத்தின் ஒரு பகுதியில் வைத்து பாதுகாப்பு ஆலோசனை மேற்கொண்டார்.
தொடர்ந்து இரு வாரங்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முப்படைகளுடன் ஆலோசனை நடத்தி ராணுவத்திற்கு முழு சுதந்திரத்தையும் அளித்தார். சம்பவம் நடந்து இரண்டு வாரங்கள் கழித்து மே 6ஆம் தேதி நள்ளிரவு பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களைக் குறி வைத்து துள்ளிய தாக்குதலை இந்திய விமான படை மேற்கொண்டது. அதைத் தொடர்ந்து இரு தரப்பிலும் தாக்குதல்கள் நடைபெற்றன. இதில் பாகிஸ்தான் தரப்பில் பலத்து சேதம் ஏற்பட்டது.
இந்த நடவடிக்கைகள் குறித்து பாரத ராணுவ அதிகாரிகளே மக்களிடம் பத்திரிகையாளர் சந்திப்புகள் மூலம் விளக்கி வந்த நிலையில், முதல் முறையாக நாட்டு மக்களுக்கு விளக்குவதற்காக இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற உள்ளார். அவரது உரையினை தூர்தர்ஷன் சேனல்கள் மற்றும் அனைத்து வானொலி நிலையங்களும் ஒலிபரப்புகின்றன.
இருநாட்டு ராணுவ நடவடிக்கைகளும் இரு தினங்களுக்கு முன் பரஸ்பர பேச்சுவார்த்தை மற்றும் புரிந்துணர்வு அடிப்படையில் நிறுத்திக் கொள்ளப்பட்ட நிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷஃபா ஷெரீப் பாகிஸ்தான் தொலைக்காட்சிகளில் தோன்றி இந்தியாவுக்கு எதிரான போரில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதாக அறிவித்தார். தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவ தளபதிகள் டிவி பேட்டிகளில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதாக அறிவிப்புகளை வெளியிட்டு வந்தனர் மேலும் இந்தியாவின் விமானங்களையும் விமானத்தளங்களையும் தாக்கி அழித்ததாகவும் கூறி வருகின்றனர்.
பாகிஸ்தான் கூறும் பொய்களை நம்பி இந்தியாவில் உள்ள சிலரும் அரசியல்வாதிகள் சிலரும் கேள்விகள் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் இந்திய தரப்பின் நிலையை விளக்குவதற்காகவும் உண்மை நிலையை எடுத்துரைப்பதற்காகவும் நாட்டு மக்களிடையே நிலவும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையிலும் பிரதமர் நரேந்திர மோடி இன்று மக்களை ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை எடுத்த பிறகு முதல் முறையாக சந்திக்கிறார். எனவே இந்த பிரதமரின் உரை குறித்து மக்களிடையே எதிர்பார்ப்பு அதிகம் எழுந்துள்ளது.