
வர்த்தகர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படும் சுமையை குறைக்கும் வகையில், நான்கு அடுக்குகளாக இருந்த ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, இரண்டு அடுக்குகளாக எளிமைப்படுத்தப்பட்டது. 5 %, 12%, 18% மற்றும் 28% என நான்கு அடுக்குகளாக இருந்த ஜி.எஸ்.டி., இனி 5%, 18% என இரு அடுக்குகளாக மாற்றப்பட்டது. இந்த சீர்திருத்தம் நாளை 22ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதனால், அத்தியாவசியப் பொருட்களின் விலை வெகுவாகக் குறையும்.
இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களுக்கு தொலைகாட்சிகள் வாயிலாக பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர்,’நாளை முதல் அமலாகும் ஜிஎஸ்டி சீர்திருத்தம் நாட்டின் வளர்ச்சியை அதிகரிக்கும். வருமான வரிச்சலுகை மூலம் மக்களுக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. ஜிஎஸ்டி வரிக்குறைப்பு மூலம் இரண்டாம் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைத்துள்ளது,” என்று குறிப்பிட்டார்.
இந்தியப் பொருட்களையே வாங்குவீர்!
பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டதாவது…
நாளை முதல் நவராத்திரி தொடங்குகிறது. அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நவராத்திரியின் முதல் நாளில், தன்னிறைவு பெற்ற இந்தியாவை நோக்கி முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளோம்.
நாளை அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தம் அமலுக்கு வருகிறது. இந்த சீர்திருத்தத்துக்காக நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சீர்திருத்தம், நாட்டின் வளர்ச்சியை அதிகரிப்பதுடன், வர்த்தகத்தை எளிதாக்கி முதலீட்டை அதிகரிக்கும்.
ஒரே தேசம், ஒரே வரி என்ற கனவு ஜிஎஸ்டி மூலம் பூர்த்தியானது. தற்போது காலம் மாறிவிட்டது. தேவையும் மாறிவிட்டது. அதனால் தான் தற்போது இரண்டாம் தலைமுறை வரி சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது
ஜிஎஸ்டி.,க்கு முன்பு 12 வகையான வரிகள் இருந்தன. இதனால் ஒரு நகரத்தில் இருந்து மற்றொரு நகரத்திற்கு பொருட்களை கொண்டு சென்று விற்பதிலும் மக்கள் சிரமப்பட்டனர்.
2014 ல் பிரதமராக பதவியேற்ற போது, ஒரு வெளிநாட்டு பத்திரிகையில் செய்தி ஒன்று வெளியானது. அதில், இந்தியாவில் நிறுவனங்கள் சந்திக்கும் பிரச்னைகளை பற்றி தெரிவிக்கப்பட்டு இருந்தது. நிறுவனம் ஒன்று ஒரு பொருளை பெங்களூருவில் இருந்து ஐதராபாத் கொண்டு செல்வதில் பிரச்னைகள் இருந்தது. முதலில், அதனை பெங்களூருவில் இருந்து ஐரோப்பாவுக்கும், அதன் பிறகு அந்த பொருளை ஐரோப்பாவில் இருந்து ஐதராபாத்துக்கும் கொண்டு சென்றதாக தெரிய வந்தது. அப்போது, இருந்த வரிகள் மற்றும் சுங்கச்சாவடிகளால் ஏற்பட்ட பிரச்னை இது.
லட்சக்கணக்கான நிறுவனங்கள், மக்கள், பல்வேறு வரிகளால் அவதிப்பட்டனர். பொருட்களை கொண்டு செல்வதற்கு அதிக செலவு செய்தனர். அந்த சூழ்நிலையில இருந்து விடுவிக்க வேண்டியது அத்தியாவசியமாக இருந்தது.
இந்த நிலையில் தான், 2017 ல் ஜிஎஸ்டியை அமல்படுத்திய போது இந்தியா, பழைய வரலாற்றை மாற்றி புதிய வரலாற்றை நோக்கி திரும்பியது. வர்த்தகர்களும், மக்களும் பல மறைமுகவரிகளால் அவதிப்பட்டு வந்தனர்.
ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட போது, ஒவ்வொரு மாநிலங்கள் எழுப்பிய கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு தீர்வு அளித்தோம். அனைவரின் ஒருமித்த முடிவோடு பெரிய வரி சீர்திருத்தம் அமலானது. மத்திய மாநில அரசுகளின் முயற்சி காரணமாக, பல வரி அடுக்கு பின்னணியில் இருந்து நாடு விடுபட்டது. ஒரே நாடு, ஒரே வரி என்ற கனவு நனவானது.
ஜிஎஸ்டி அமலாக்கம் நாட்டின் பெரிய வரி சீர்திருத்தம். தற்போது வரி கட்டமைப்பு எளிமைபடுத்தப்பட்டு உள்ளது. இந்த சீர்திருத்தம் நாட்டின் சேமிப்புத் திருவிழா. பல்வேறு பெயர்களில் இருந்த மறைமுக வரிகளினால் ஏற்பட்ட சிக்கல்கள் ஜிஎஸ்டியால் அகன்றன.
ஜிஎஸ்டி 2.0 – நாளை முதல் அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் அமலுக்கு வருகின்றன; இதன் மூலம் மக்களின் சேமிப்பு அதிகரிக்கும். கோடிக்கணக்கான குடும்பங்கள் மகிழ்ச்சி அடையும். சரக்கு போக்குவரத்தில் இருந்த தடைகளை நீக்கவே ஜிஎஸ்டி கொண்டு வரப்பட்டது.
இனி 5% மற்றும் 18% வரிகள் மட்டுமே நடைமுறையில் இருக்கும். வருமான வரிச் சலுகை, ஜிஎஸ்டி வரி குறைப்பால் இந்த ஆண்டு ரூ.2.5 லட்சம் கோடி வரை செலவு குறையும்.
99 சதவீத பொருட்கள் 5 சதவீத வரி வரம்பில் வந்துள்ளன. உணவு, மருந்து , பல்வேறு வீட்டு உபயோக பொருட்களின் விலை இனி குறையும். சிக்கலான வரி கட்டமைப்பில் இருந்து நுகர்வோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்திய பொருளாதாரத்தில் புதிய சகாப்தம் துவங்குகிறது.
உணவுப் பொருட்கள், மருந்துகள், அன்றாடம் பயன்படுத்தப்படும் சோப்பு உள்ளிட்ட பொருட்களின் விலை விரைவில் மலிவாகப்போகின்றன. வீடு, டிவி, ப்ரிட்ஜ், ஸ்கூட்டர், கார் போன்ற பொருட்களை வாங்குவது இனி எளிதாகும்.
வரும் 2047ல் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை, தற்சார்பு பாரதம் என்ற பாதை மூலமாகவே நாம் அடைய முடியும். இதனை நான் மீண்டும் மீண்டும் கூறுகிறேன்
இந்தியாவின் விடுதலைக்கு சுதேசி என்ற மந்திரம் எப்படி சக்தியைக் கொடுத்ததோ, அதேபோல் சுதேசி பொருட்கள் நாட்டிற்கு புதிய வலிமையைக் கொடுக்கும்.
நமது பாக்கெட்டில் இருக்கும் ஒரு சீப்பு இந்தியாவில் தயாரிக்கப்பட்டதா? என்று கூட நமக்குத் தெரியாது.
எனவே நாம் எந்த ஒரு பொருளை வாங்கினாலும் அது இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். இந்தியர்களின் வியர்வை அடங்கியதாக இருக்க வேண்டும்
தற்சார்பு பாரதத்திற்காக எதையெல்லாம் உள்நாட்டில் தயாரிக்க முடியுமோ அதை எல்லாம் நாம் இங்கேயே தயாரிக்க வேண்டும்.
நாம் தயாரிக்கும் பொருட்கள் உலகில் பல்வேறு நாடுகளில் தயாரிக்கப்படும் பொருட்களை விட சிறந்ததாக இருக்க வேண்டும். அவை உலகின் அனைத்து சந்தைகளிலும் கிடைக்க வேண்டும்.
அந்தளவுக்கு தரமான பொருட்களை உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்ய வேண்டும். இதனால் நாட்டின் பெருமையும், கவுரவமும் அதிகரிக்கும்.
நாட்டில் சுமார் 25 கோடி மக்கள் ஏழ்மையில் இருந்து விடுபட்டு, நடுத்தர வர்க்கத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு முன்பு ரூ.12 லட்சம் வரை வருவாய் இருந்தால் வருமான வரி கட்ட தேவையில்லை என்ற சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதன் பலன்களை நாட்டு மக்கள் அனுபவித்து வருகின்றனர்.
கடந்த 11 ஆண்டுகளில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர். அவர்களுக்கு பல கனவுகள் நோக்கங்கள் உள்ளன. சில மாதங்களுக்கு முன்னர் ரூ.12 லட்சம் வரை வருமான வரி சலுகை அளிக்கப்பட்டது. அரசு வழங்கிய முதல் பரிசு. அரசு பரிசளித்தது. ரூ.12 லட்சம் வரை வரிச்சலுகை அளித்த போது மக்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
தற்போது இரண்டாம் பரிசாக ஜிஎஸ்டி வரிக்குறைப்பு அமல் செய்யப்படுகிறது. இதன் மூலம் நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய ஜிஎஸ்டிகுறைப்பு மூலம் அவர்கள் தங்களது கனவுகளை நிறைவேற்ற முடியும்.
வருமான வரியிலும், ஜிஎஸ்டியிலும் சலுகை அளித்துள்ளோம். நடுத்தர மக்கள் இனி எளிதாக தங்களது இலக்குகளை நிறைவேற்றுவார்கள். இந்த வரி சீர்திருத்தத்தால் சிறிய கடைக்காரர்கள் கூட பலன் அடைவார்கள். மக்கள் ரூ.2.5 லட்சம் கோடி சேமிக்க முடியும்.
சீர்திருத்தம் என்பது தொடர்ச்சியாக நடக்கும் நடவடிக்கை. காலமும் தேவையும் மாறும் போது மாற்றத்தை ஏற்பது அவசியம். மாற்றங்கள் ஏற்படும் போது நாட்டில் மாற்றம் தேவைப்படுகிறது. அடுத்த தலைமுறை சீரதிருத்தம் மிகவும முக்கியமானது. நாட்டின் தற்போதைய தேவை மற்றும் எதிர்காலத்தை மனதில் வைத்து ஜிஎஸ்டி சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
டிவி, டூவீலர்கள், கார்கள் உள்ளிட்டவற்றை எளிதாக வாங்க முடியும். ஜிஎஸ்டி குறைப்பு பலன்களை நுகர்வோர்களுக்கு கொண்டு செல்ல வணிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இரண்டாம் தலைமுறை சீர்திருத்தம் அனைத்து தரப்பினருக்கும் நன்மை பயக்கும்.
சுய சார்பு இந்தியாவே இந்த நேரத்தில் தேவையாக உள்ளது. தன்னிறைவு பெற்ற இந்தியாவுக்கு சிறு குறு நடுத்தர தொழில்துறையினர் ஊக்கம் அளிக்கின்றனர். உள்நாட்டு பொருட்களை பயன்படுத்தினால் நாட்டில் வளர்ச்சி ஏற்படும். இந்தியா வேகமாக வளர்ச்சி அடையும். சுய சார்பு இந்தியா என்ற இலக்கை எட்ட முடியும். உற்பத்தி துறைக்கு முக்கியத்துவம் அளித்து, முதலீட்டுக்கு ஏற்ற சூழ்நிலையை மாநிலங்கள் ஏற்படுத்த வேண்டும்.
இந்தியர்களின் அன்றாட வாழ்க்கையில் வெளிநாட்டு பொருட்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு வீட்டிலும் உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்கள் இருக்க வேண்டும். ஒவ்வொரு கடைகளும் அந்த பொருட்களை விற்க வேண்டும். சுதேசி 2.0 இயக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.!





