
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலையில் சனிக்கிழமை புரட்டாசி சனி வார கருட சேவையும் ஞாயிற்றுக்கிழமை புரட்டாசி மஹாளயபட்ச அமாவாசை வழிபாடு விமர்சையாக நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலையில் சீனிவாச பெருமாள் கோயில் உள்ளது.இங்கு மூலவரான சீனிவாசப்பெருமாள் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
இந்த திருத்தலம் பக்தர்களால் தென் திருப்பதி என அழைக்கப்படும்.இங்கு ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமைகளில் கருட சேவை வெகு விமர்சையாக நடைபெறும்.அதை தொடர்ந்து வரும் ஞாயிறன்றும் பக்தர்கள் அதிகளவில் தரிசனம் செய்ய வருவார்கள்.
அந்த வகையில் இந்த ஆண்டு புரட்டாசி சனி வார கருட சேவை 20ந்தேதி அதிகாலை 4:30 மணி அளவில் தொடங்கியது. அப்பொழுது சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டு சீனிவாச பெருமாள் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதிகாலை முதலிலேயே பக்தர்கள் மலையேறி கூட்டம் கூட்டமாக சென்று சீனிவாச பெருமாளை வழிபட்டனர். ஏராளமான பக்தர்கள் முடி இறக்கியும் விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளைந்த பொருட்களை காணிக்கையாக செலுத்திய வழிபாடு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து கோவிலில் பகல் 12:30 மணிக்கு உச்சிக்கால பூஜையும் இரவு 8 மணிக்கு சாயரட்ச பூஜையும் நடைபெற்றது. நண்பகல் 12.00 மணிக்கு சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனமும் 4.00 மணிக்கு உற்சவர் கிரிவலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சௌ.சக்கரையம்மாள் மற்றும் கோவில் அலுவலர்களும் திருக்கோயில் பணியாளர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.
இன்று மஹாளய பட்ச அமாவாசை என்பதால் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை விமர்சையாக நடைபெற்றது.திரளான பக்தர்கள் மலையை சுற்றி வந்து பெருமாளை தரிசனம் செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி. ராஜா தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்க்காவல் படை வீரர்கள் பாதுகாப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம், குடிநீர், மருத்துவ வசதிகளும், செய்யப்பட்டிருந்தது. திருவண்ணாமலைக்கு பல்வேறு ஊர்களில் இருந்து அரசு பஸ் நேரடியாக இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது திருவண்ணாமலையில் சாமி தரிசனம் செய்துவிட்டு ஏராளமான பக்தர்கள் ஆண்டாள் கோயிலுக்கு வந்து ஸ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் பெரிய பெருமாள் அருகில் உள்ள கிருஷ்ணன் கோயில் சென்று அங்கு சாமி தரிசனம் செய்தனர்.





