
செங்கோட்டை சென்னை செங்கோட்டை பொதிகை அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில் தனது 21 ஆண்டுகால சேவையை நிறைவு செய்து, 22வது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ள நிலையில் இந்த ரயில் சாதாரண பயணிகள் பெட்டிகளை அதிகரித்து குறைந்த கட்டண மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டிகள் இணைத்து பயண நேரத்தை ஒரு மணி நேரம் குறைத்து இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
ரயில் பயணம் என்றால் சுகமானது.அதிலும் இந்த பொதிகை அதிவிரைவு ரயிலில் பயணிப்பது தென்காசி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பலருக்கு மிக மிக இயல்பானது.ராத்திரி பயணத்தை துவக்கினால் விடிவதற்கு முன் சென்னை சென்று விடலாம்.
பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் முதலில் தென்காசி சென்னை இடையே வாரம் ஒருநாள் இயங்கி பின்னர் செங்கோட்டை சென்னை இடையே வாரம் 5 நாள் இயங்கி தற்போது தினசரி ரயிலாக பயணிகளின் ஏகாபித்த ஆதரவுடன் மதுரை கூட்டத்தில் அதிக வருவாயீட்டும் ரயிலாக பொதிகை அதிவிரைவு ரயில் இயங்கி வருகிறது.
பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் தனது 21 ஆண்டுகால சேவையை நிறைவு செய்து, 22வது ஆண்டில் அடி எடுத்து வைத்தது. இதையடுத்து செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்கம் சார்பாக இந்த ரயிலுக்கான கொண்டாட்டம் 20/09/25 மாலை செங்கோட்டை ரயில் நிலையத்தில் நடந்தது. இதில் செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்க தலைவர் முரளி, இணை செயலாளர் செந்தில் ஆறுமுகம், பொருளாளர் மற்றும் மதுரை ரயில் கோட்ட ரயில் பயனாளர்கள் ஆலோசனைக்குழு உறுப்பினர் சுந்தரம் , PRO ராமன் மற்றும் தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்க தலைவர் பாண்டியராஜா , செங்கோட்டை அக்ரி ஷேக் , மேலூர் குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்க தலைவர் முரளி இவ்விழாவிற்கான ஜாங்ரி மற்றும் இரண்டு கிலோ எடை உள்ள கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
பல ஆயிரம் பயணிகள் பயணிக்கும் இந்த ரயில் வேகத்தை அதிகரிக்க வேண்டும் ஒரு மணி நேரம் பயண நேரத்தை குறைக்க வேண்டும்.கூடுதலாக சாதாரண பயணிகள் பெட்டி குறைந்த கட்டணத்தில் மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டி இணைக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.





