
புது தில்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, தில்லியில் நாடாளுமன்றம் அதிமுக., நாடாளுமன்ற உறுப்பினர்கள், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமையில்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று காலை நாடாளுமன்ற வளாகத்தில் கூடிய அவர்கள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தாங்கள் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கும் போது, எவ்வித விவாதமும் நடத்தாமல் பட்ஜெட்டை நிறைவேற்றியதைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே அப்போது பேசிய மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை, நாடாளுமன்றத்தில் எங்கள் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவில்லை என்றால், தமிழகத்தில் போராட்டம் பெரிய அளவில் முன்னெடுக்கப்படும் என்றார்.

முன்னதாக, நாடாளுமன்ற வாயில் முன்னர் அதிமுக., எம்பி.,க்கள் பதாகைகள் ஏந்தி கோஷமிட்ட போது, ஆச்சரியகரமாக பாமக., எம்பி., அன்புமணி ராமதாஸும் கறுப்புச் சட்டை அணிந்தபடி கலந்து கொண்டார்.



