
திருப்பதி: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது பேரன் தேவ்னேஷின் பிறந்தநாளை யொட்டி திருப்பதி திருமலை அன்னதான திட்டத்துக்கு ரூ. 25 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளார்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பேரன் தேவ்னேஷின் 4ஆவது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதை யொட்டி, முதல்வர் சந்திரபாபு நாயுடு திருப்பதி ஏழுமலையான் கோயில் அன்னதான திட்டத்திற்காக ரூ.25 லட்சம் நன்கொடை வழங்கினார். தேவ்னேஷ் பெயரில் நேற்று பக்தர்களுக்கு அன்னப் பிரசாதம் வழங்கப்பட்டது.
நேற்று புதன்கிழமை திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு குடும்பத்துடன் வந்தார் சந்திரபாபு நாயுடு. ஏழுமலையானை தரிசனம் செய்துவிட்டு, ஆந்திர மக்களின் மகிழ்ச்சிக்காகவும், வளர்ச்சிக்காகவும் பிரார்த்தனை செய்ததாகக் கூறினார். பின்னர்,
ஏழுமலையான் கோயிலில் ஒரு நாளைக்கு பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னப் பிரசாத திட்டத்திற்காக ரூ. 25 லட்சம் காணிக்கையாக வழங்கினார். இதனை தனது பேரன் பெயரிலேயே காணிக்கையாக செலுத்தினார் நாயுடு.
சந்திரபாபு நாயுடுவுடன் அவரது மகன் நர லோகேஷ், அவரது மனைவி நர பிஹ்மணி, நடிகரும் சந்திரபாபு நாயுடுவின் சம்பந்தியுமான பாலகிருஷ்ணா எம்எல்ஏ ஆகியோரும் உடன் வந்தனர். அனைவரும் கோயிலின் அன்னதானக் கூடத்தில் உணவு உண்டனர்.



