
குடும்ப நல நீதிமன்றம் விதித்த தடையை மீறி தில்லியில் சசிகலா புஷ்பா, ராமசாமி திருமணம் நடைபெற்றது.
அதிமுக., மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவுக்கும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவருக்கும் திருமணம் இன்று நடைபெறும் என்று அழைப்பிதழ்களுடன் இணையத்தில் தகவல்கள் பரவின. ஊடகங்களிலும் செய்திகள் வெளியாயின.

இந்நிலையில், இந்தத் திருமணத்துக்கு எதிராக ராமசாமியின் மனைவி சத்யபிரியா என்பவர், மதுரை குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு ஒன்ரைத் தொடுத்தார். அந்த மனுவில், ‘தனக்கும் ராமசாமிக்கும் 2014ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ராமசாமிக்கும் எனக்கும் 2016ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்துள்ளது. அவர், என்னைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியுள்ளார். தற்போது, எனக்குத் தெரியாமல் இன்னொரு திருமணம் செய்யவுள்ளார். அதைத் தடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், சத்ய பிரியாவுக்கும் ராமசாமிக்கும் இடையே நடைபெற்ற திருமணம், அங்கீகரிக்கப்பட்ட திருமணம். ராமசாமி, வேறொரு திருமணம் செய்துகொள்ள விரும்பினால், நீதிமன்றத்தின் முன் சத்யபிரியாவை முறைப்படி விவாகரத்து செய்துவிட்டு வேறொரு திருமணம் செய்துகொள்ளலாம்” என்று கூறியது. இதனால், ராமசாமி இன்னொரு திருமணம் செய்து கொள்வதற்கு தடையும் விதித்தது.
இந்நிலையில், இன்று தில்லியில் திட்டமிட்டபடி சசிகலா புஷ்பாவுக்கும் ராமசாமிக்கும் திருமணம் நடைபெற்றது. குடும்ப நல நீதிமன்றத்தின் உத்தரவை எல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல், எம்.பி. ஒருவர் தனது திருமணத்தை முடித்துக் கொண்டுள்ளார்.



