பெங்களூரு: காவிரி மேலாண்மை வாரியம் என்ற பேச்சே கூடாது என்று கர்நாடகத்தைச் சேர்ந்த கன்னட சலுவளி தலைவர் வாட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளார். இதற்காக ஏப்.12ல் முழு அடைப்புப் போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழ்நாட்டில் போராட்டம் தீவிரம் அடைந்து வரும் நிலையில், தமிழக போராட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட கூட்டமைப்புகளின் ஒருங்கிணைப்பாளரும், கன்னட சலுவளி கட்சியின் தலைவருமான வாட்டாள் நாகராஜ் தலைமையில் அத்திபள்ளி பகுதியில் கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது தமிழக எல்லையை முற்றுகையிட வந்த வட்டாள் நாகராஜ் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் செய்தியார்களிடம் கூறுகையில், முழுஅடைப்பு போராட்டம் நடத்த எங்களுக்கு எண்ணம் இல்லை. தமிழக போராட்டம் எங்களையும் போராடத் தூண்டியுள்ளது. மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முயன்றால் அமைச்சர்கள், எம்.பி.க்களை இங்கே நுழைய விடமாட்டோம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கூடாது என வலியுறுத்தி, வரும் 12ஆம் தேதி கர்நாடகத்தில் முழு அடைப்பு நடத்தப்படும் என்று கூறினார்.