புது தில்லி: கர்நாடக சட்டமன்றத் தேர்தல் களைகட்டியுள்ள நிலையில், அம்மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் முதல் வேட்பாளர் பட்டியலை பாஜக., தலைமை வெளியிட்டுள்ளது. அதில், பாஜக., சார்பில் போட்டியிட சசிகலா ஜோலி, ரூபாலி நாயக் என பெண் வேட்பாளர்களும் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
கர்நாடக சட்ட சபைக்கான தேர்தல் வரும் மே 12-ல் நடைபெற உள்ளது. இதை அடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர். மாநிலத்தில் தற்போது ஆட்சியில் உள்ள காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியில் உள்ளது. அதற்காக, லிங்காயத் தனி மதம், காவிரி நீர் திறப்பு, மேலாண்மை வாரியம் உள்ளிட்ட பிரச்னைகளை அரசியல் ரீதியாக மாற்றி, வாக்காளர்களைச் சேர்க்கும் முயற்சியில் உள்ளது. அதற்கு ஏற்ப தமிழகத்திலும் காங்கிரஸின் கூட்டணிக் கட்சியான திமுக., காவிரி அரசியலைச் செய்து வருகிறது.
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன், ஈழத் தமிழர்கள் லட்சக்கணக்கானோர் என பலரின் படுகொலைக்குக் காரணமாக இருந்த காங்கிரஸ் திமுக., கூட்டணிகளில் அங்கம் வகித்த திருமாவளவன் உள்ளிட்டோரும் கர்நாடகத்தில் காங்கிரஸ் வெற்றி பெற, தமிழகத்தில் காவிரியைப் பிரச்னையாக்கி அரசியல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தாங்கள் ஏற்கெனவே இருந்து இழந்த ஆட்சியை மீண்டூம் பெற பாஜக.,வினர் முயன்று வருகின்றனர். பாஜக.,வின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எடியூரப்பா தலைமையில், தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் பாஜகவினர். இதற்காக காங்கிரஸ், பாஜக., இரு கட்சிகளின் தலைவர்களான ராகுல் மற்றும் அமித்ஷா ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்னொரு புறம் ம.ஜ.த., கட்சித் தலைவர் குமாரசாமி பிரசாரம் செய்து வருகிறார்.
224 தொகுதிகளைக் கொண்ட சட்டசபைக்கு நடக்கு தேர்தலில், முதல் கட்டமாக, 72 தொகுதிக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக., வெளியிட்டுள்ளது. இதில் 2 பெண் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். நிபானி தொகுதிக்கு சசிகலா ஜோலியும் , உத்தர கன்னடா மாவட்டத்தின் கர்வார் தொகுதிக்கு ரூபாலி நாயக்கும் போட்டியிடுவதாக அறிவிக்கப் பட்டுள்ளனர்.
புதுதில்லியல் நடைபெற்ற வேட்பாளர்கள் பட்டியல் வெளியீட்டு விழாவில் பாஜக., தலைவர் அமித்ஷா, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கர்நாடக சட்டமன்றத்துக்கு வரும் மே மாதம் 12 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் முடிவுகள் மே15 அன்று வெளியாகும்!