புது தில்லி: ஸ்கீம் என்ற சொல் இப்போது தமிழக அரசியல் களத்தில் பலமாக விவாதிக்கப் பட்டு வரும் நிலையில், ஸ்கீம் என்பது, ஒரு செயல் திட்டம் மட்டுமே! அது மேலாண்மை வாரியத்தைக் குறிப்பதல்ல என்று கூறியது உச்ச நீதிமன்றம். இருப்பினும், காவிரி நீர் பங்கீடு தொடர்பாக மே 3-ஆம் தேதிக்குள் வரைவு செயல்திட்டத்தை தயாரித்து மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அதன் பின்னரே ஸ்கீம் என்பது குறித்த தெளிவான விளக்கத்தை தாம் அளிப்பதாகவும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது!
காவிரி நீர்ப் பங்கீடு தொடர்பாக கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பை அளித்தது. அதில், ஆறு வார காலத்துக்குள் குறிப்பிட்ட திட்டத்தை அமலாக்க வேண்டும் என்று தெரிவிக்கப் பட்டதால், அது, காவிரி மேலாண்மை வாரியம் தான் என தமிழக அரசு சொல்லி வந்தது. ஆனால் கர்நாடகாவும், கேரளாவும், அது காவிரி மேலாண்மை வாரியம் அல்ல, ஸ்கீம் அதாவது ஒரு திட்டம் என்றுதான் கூறியுள்ளது. எனவே அது மேலாண்மை வாரியத்தைக் குறிப்பிடவில்லை. இதையும் மீறி மத்திய அரசு, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் அதற்கு மத்திய அரசுதான் பொறுப்பு என்று கூறின. இதனால் மத்திய நீர்வளத்துறை குழம்பிப் போனது. இதனை காவிரி தொடர்புடைய நான்கு மாநில அரசுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட கூட்டத்தில், நீர்வளத்துறையின் சார்பில் யு.பி. சிங்க் எடுத்துரைத்துள்ளார்.
இதனிடையே கேரளம் இது குறித்து உச்ச நீதிமன்றமே விளக்கம் தரட்டும் என்று சீராய்வு மனு தாக்கல் செய்ய, மத்திய அரசும் வேறு வழியின்றி, ஸ்கீம் என்ற வார்த்தையின் பொருள் என்ன என்று கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை விளக்கவும், மேற்கொண்டு செயல்பட வேண்டிய நடமுறைகள் குறித்து விவாதிக்கவுமே, மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தில், மாநில அரசுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டங்களுக்கு 5 வார கால அவகாசம் ஓடிய நிலையில், உச்ச நீதிமன்றம் அளித்த 6 வார கால அவகாசம் நிறைவடைந்தது. இதனால், தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து உச்ச நீதிமன்றம் அளித்த 6 வார கால அவகாசம், மார்ச் 29ம் தேதி நிறைவடைந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை என்று தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து, நீதிமன்ற தீர்ப்பின் படி மத்திய அரசு செயல்படவில்லை என்று மார்ச் 31ம் தேதி மத்திய கேபினட் செயலாளர் மற்றும் மத்திய நீர்வளத்துறை செயலாளர் மீது தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.
தொடர்ந்து புதுச்சேரியும் வழக்கு தொடர, இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள், மற்றும் மத்திய அரசு தாக்கல் செய்த ‘ஸ்கீம்’ என்பதன் விளக்கம் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனு ஆகியவற்றை திங்கள் கிழமை இன்று விசாரிப்பதாகக் கூறியது உச்ச நீதிமன்றம்.
அதன்படி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்த போது மே 3ஆம் தேதிக்குள் காவிரி நீர் பங்கீடு குறித்த வரைவு செயல்திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டனர்.
கர்நாடகத்துக்கு உத்தரவு:
இன்று காலை காவிரி வாரியம் அமைக்காததைக் கண்டித்து தமிழக அரசு தொடர்ந்த மனு மீதான விசாரணையின் போது, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்துக்கு காவிரி நீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என்பதை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வலியுறுத்தினார்.
மேலும், மாதந்தோறும் காவிரியில் இருந்து எவ்வளவு நீர் திறந்து விட வேண்டுமோ அதை செயல்படுத்த வேண்டும் என்றும், காவிரி வழக்கில் கர்நாடக மாநிலத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஸ்கீம் பற்றி இப்போது கூறமுடியாது:
ஸ்கீம் குறித்த மத்திய அரசின் கேள்விக்கு பதிலளிக்கும் போது, மேலாண்மை வாரியம் என காவிரி நடுவர் மன்றம் தெரிவித்திருந்தாலும், எங்கள் தீர்ப்பில் அதனை ஒரு செயல்திட்டம் என்றுதான் குறிப்பிட்டுள்ளோம்.
காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில், காவிரி வரைவு செயல் திட்டத்தை மத்திய அரசு மே 3 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். எனவே, ஸ்கீம் குறித்து தற்போது எதுவும் கூற முடியாது! வரைவு அறிக்கைக்குப் பின்பே அதிகுறித்து முடிவு சொல்ல முடியும். ஸ்கீம் என்பது காவிரி மேலாண்மை வாரியம் என நாங்கள் தீர்ப்பில் குறிப்பிடவில்லை… என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை உள்ளடக்கியதுதான் உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு. இருந்தாலும், காவிரி நடுவர் மன்றத்தால் குறிப்பிடப் பட்ட நீரின் அளவை குறைத்து, அதாவது தமிழகத்திற்கான நீர் 14.75 டிஎம்சி நீர் குறைக்கப்பட்ட ஒரு அம்சம் மட்டும்தான் நடுவர் மன்ற தீர்ப்பிலிருந்து மாற்றம் செய்யப்பட்ட ஒரு அம்சம்.
இது தவிர உச்ச நீதிமன்றம் குறிப்பிட்ட மற்றவை அனைத்தும் நடுவர் மன்ற தீர்ப்பை உள்ளடக்கியதுதான் என்றும், எனவே அதில் குறிப்பிடப்பட்ட அம்சங்கள் அடங்கிய ஒரு செயல் திட்டத்தை உருவாக்கி மே 3ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது. அடுத்து, இதுதொடர்பாக எந்த மாநிலத்துடனும் ஆலோசிக்க தேவையில்லை. மத்திய அரசுக்குத்தான் நீதிமன்றம் உத்தரவிட்டது. எனவே தீர்ப்பை செயல்படுத்த வேண்டியது மத்திய அரசுதான் என்று உச்ச நீதிமன்றம் தெளிவாக்கியுள்ளது.
கர்நாடகமும், கேரளமும் அரசியல் லாபம் கருதி, கர்நாடகத் தேர்தல் களனை கருத்தில் கொண்டு, ஸ்கீம் என்ற வார்த்தையை வைத்து குழப்பத்தை ஏற்படுத்தி, மத்திய அரசை நெருக்கின. எனவேதான் மத்திய அரசும் உச்ச நீதிமன்றத்தையே நாடியது. ஆனால், கடைசிக் கட்டத்தில் ஸ்கீம் என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிடுவது எதனை என்று மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், நீங்கள் மே.3ல் திட்ட வரைவினை அளியுங்கள்; அதன் பிறகு ஸ்கீம் என்பதன் பொருளுக்கு விளக்கத்தை நாங்கள் கூறுகிறோம் என்று கூறி ஒதுங்கிக் கொண்டனர்.
இந்நிலையில், தீர்ப்பினை செயல்படுத்தும் கட்டாயச் சூழல் மத்திய அரசுக்கே உண்டு என்றும், அதுவரை கர்நாடக தமிழக மக்கள் அமைதி காக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டதால், அடுத்து மத்திய அரசின் பக்கமே இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தால் திருப்பிவிடப் பட்டுள்ளது. மத்திய அரசு கொடுக்கும் வரைவு திட்டம் மூலமே, அடுத்து அதன் நிலை என்பது தெரியவரும்.