இந்தியா குறித்து விமர்சிக்கும் ஒபாமா, அமெரிக்க இனவெறி அறியாதவரா?: யோகி ஆதித்யநாத்

இந்தியா

Adityanath-Yogiவாராணசி: இந்தியாவின் மதச் சார்பின்மை விவகாரம் குறித்துப் பேசும் முன்பாக அமெரிக்காவின் இனவெறிப் பிரச்னையை பராக் ஒபாமா தீர்த்துக்கொள்ளட்டும் என்று பாஜக எம்.பி யோகி ஆதித்யநாத் கூறினார். விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் பொன்விழா ஆண்டு விழாவை முன்னிட்டு, வாராணசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய யோகி ஆதித்யநாத்… “இந்தியாவில் அனைத்து மதங்களும் பூத்துக் குலுக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதுபோன்ற ஒரு நாட்டைக் குறை சொல்லும் ஒபாமா, முதலில் தனது நாட்டில் நடைபெற்று வரும் இனவெறித் தாக்குதல் பிரச்னையைத் தடுத்து நிறுத்த வேண்டும். பல ஆண்டுகளாகவே அமெரிக்க சாலைகளில் மோசமான இனவெறித் தாக்குதல்கள் நடந்து வருகின்றன. இந்தியாவில், இந்துக்களைப் போலவே, இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் தங்களது மத வழிபாட்டை தடையின்றி நடத்திக் கொள்கின்றனர். அப்பாவி பழங்குடியினர், தலித்துகளை சேவை என்ற பெயரில் கிறிஸ்தவ மிஷனரிகள் மதமாற்றம் செய்கின்றன. அப்போது வாய்மூடி அவர்களுக்கு ஒத்துழைத்த மதச்சார்பற்றவர்கள் என்று கூறிக் கொள்பவர்கள், இந்துக்கள் தாய் மதம் திருப்பும் வேலையில் ஈடுபடத் தொடங்கியதும் அலறுவது ஏன்? நமது நாட்டில் ராமராஜ்யம் வேண்டும் என்றால், இந்துக்கள் ஒருபோதும் ஜாதி அடிப்படையில் பிளவுபட்டுவிடக் கூடாது. அயோத்தியில் ராமர் கோயிலைக் கட்டுவது நிச்சயம்… என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.