காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு: மகனுக்கு விட்டுக் கொடுத்து தொகுதி மாறும் சித்தராமையா

இதனிடையே தொகுதியில் நிலவும் அதிருப்தி, மாநிலத்தில் சித்தராமையாவுக்கு எதிராக உள்ள ஊழல் குற்றச்சாட்டுகள், மக்களின் எதிரான மனோநிலை ஆகியவற்றால் காங்கிரஸுக்கு பின்னடைவு என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இந்தியா டுடே முன்னதாக நடத்திய கருத்துக் கணிப்பில், காங்கிரஸ் வெற்றி பெறும், ஆனால் சித்தராமையாவுக்கு மீண்டும் முதல்வர் வாய்ப்பு கிடைக்காது என்று கூறியிருந்தது.

புது தில்லி: கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் மகனுக்காக தனது தொகுதியை விட்டுக் கொடுத்துவிட்டு, தான் தொகுதி மாறுகிறார் அந்த மாநில முதல்வர் சித்தராமையா.

கர்நாடக மாநில சட்டமன்றத்துக்கான தேர்தல் வரும் மே மாதம் 12-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. மே 15ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும். இதனால் மும்முனைப் போட்டி நிலவும் கர்நாடகாவில், காங்கிரஸ், பாஜக., குமாரசாமியின் ம.ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளன. பாஜக., தனது முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், 218 தொகுதிகளுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி நேற்று வெளியிட்டது. இதில், மாநில முதல்வர் சித்தராமையா, அவரது மகன் யதீந்திரா ஆகியோரில் பெயர்களும் உள்ளன. கடந்த 2008ல் இருந்து வருணா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று வந்த சித்தராமையா, இந்தத் தேர்தலில் தனது சொந்த தொகுதியை மகனுக்கு விட்டுக் கொடுத்துவிட்டு, தான் மைசூரு, சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிடுகிறார். யதீந்திரா தற்போது வருணா தொகுதியில் போட்டியிடுகிறார்.

தற்போது எம்.எல்.ஏ.,க்களாக உள்ளவர்களில் 14 பேருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. மாறாக, காங்கிரஸ் தலைவர்களின் வாரிசுளுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப் பட்டு, குடும்ப அரசியல் காங்கிரஸில் வழக்கம் போல் கொடிகட்டிப் பறக்கிறது.

முன்னதாக, சித்தராமையா ஏன் தொகுதி மாறிப் போட்டியிடுகிறார் என்பது குறித்து கருத்து கூறிய பாஜக., தேசியத் தலைவர் அமித் ஷா, பாஜக., அலையால் சித்தராமையா மிரண்டு போயுள்ளார், அதனால்தான் அவர் தன் சொந்தத் தொகுதியில் இருந்து மாறி, மைசூரு சாமுண்டீஸ்வரி தொகுதிக்கு ஓட்டம் பிடித்துள்ளார் என்று குறிப்பிட்டார். கிட்டூர் மாவட்ட பிரசாரக் கூட்டத்தில் பேசிய அமித் ஷா இவ்வாறு குறிப்பிட்டார்.