புதுதில்லி: வாராக்கடன் மற்றும் வங்கி மோசடி குறித்து மே 17ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு ரிசர்வ் வங்கி ஆளுநரை நாடாளுமன்றக் குழு கேட்டுக் கொண்டுள்ளது.
பொதுத் துறை வங்கிகளின் இயக்கத்துக்கு இன்னும் சிறப்பான வழிகாட்டுதல்களைத் தர ரிசர்வ் வங்கி என்ன நடவடிக்கைகளை கையில் வைத்துள்ளது, வங்கிகளை திவாலாக்கி விட்டு ஓட்டம் பிடிக்கும் தொழிலதிபர்களை எப்படிக் கையாள்வது, வாராக்கடனை வசூலிப்பதில் வங்கிகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்பன குறித்தெல்லாம் பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க ரிசர்வ் வங்கி கவர்னரை நாடாளுமன்றக் குழு அழைத்துள்ளது.
காங்கிரஸ் தலைவர் எம்.வீரப்ப மொய்லியின் தலைமையின் கீழ் இயங்கும் மத்திய நிதி நிலைக் குழுவினால் இந்த முடிவு எடுக்கப் பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் மே 17ஆம் தேதி நாடாளுமன்றக் குழுக் கூட்டத்துக்கு வருமாறு ரிசர்வ் வங்கி கவர்னருக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.
முன்னதாக, ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல், தனியார் வங்கிகளைக் காட்டிலும் தேசிய மயமாக்கப் பட்ட பொதுத் துறை வங்கிகள் மீதான ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள் மிகவும் தளர்வாக இருப்பதாக் கூறியிருந்தார். பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்த விவகாரத்தில் பதிலளித்த போது அவர் இதனைக் கூறியிருந்தார்.