சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதித்து ஜோத்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜஸ்தான், குஜராத், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் ஆச்ரமம் நடத்தி வந்தார் ஆசாராம் பாபு. இவர் மீது அடுத்தடுத்து பாலியல் புகார்கள் கூறப்பட்டன. 2013ல் இவர் ஒரு சிறுமியை பேய் ஓட்டுவதாகக் கூறி அடைத்து வைத்து வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த ஆசாராம் பாபு, பின்னர் 2014ல் அவரது மகனுடன் ஜோத்பூர் ஆசிரமத்தில் தங்களை வன்கொடுமை செய்ததாக குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த சகோதரிகள் புகார் அளித்தனர். இதில் ஆசாராம் பாபு மீண்டும் கைதானார். இவர் கைதானபோது, குஜராத், ராஜஸ்தான், அரியானா மாநிலங்களில் அவரது ஆதரவாளர்களால் வன்முறைகள் ஏற்பட்டன.
ஆசாராம் பாபு உள்ளிட்டோர் மீது சிறுமிகள் பாலியல் பலாத்காரம், அடைத்து வைத்தல், அச்சுறுத்தல், சதி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கடந்த 7ஆம் தேதியுடன் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
பாதுகாப்பு காரணங்களுக்காக, ஜோத்பூர் சிறைக்கே சென்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். இதில், ஆசாராம் பாபு மற்றும் அவரது ஆதரவாளர்கள் உள்ளிட்ட 5 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்த நீதிபதி, தண்டனை விவரங்களையும் அறிவித்தார். ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனையும் அவரது உதவியாளர்கள் ஷில்பி, சரத் ஆகியோருக்கு தலா 20 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக ஆசாராம் பாபு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.