புது தில்லி: மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் விழாவை சிறப்பாகக் கொண்டாடும் முயற்சியில் உள்ள மத்திய அரசு, இதற்காகக் கூட்டிய ஆலோசனைக் கூட்டத்தில் இன்றைய காந்திகளான சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளனர்.
2019 அக்டோபர் 2 முதல் 2020ஆம் ஆண்டு வரை காந்தியின் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாட திட்டமிடப்பட்டு, குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடத்தப் பட்டது.
இந்தக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் 23 மாநிலங்களின் முதலமைச்சர்களும், பல்வேறு கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
ஆனால் தங்கள் பெயரில் காந்தியை வைத்துக் கொண்டுள்ள நேரு குடும்ப வாரிசுகளான காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். மேலும், அரசியல் காரணங்களால் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோரும் கலந்து கொள்ளவில்லை.