மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் தகுதித் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது. இதற்கான தேர்வு இன்று காலை துவங்கியது. இந்தத் தேர்வு எழுதுவதற்காக தமிழக மாணவர்கள் 1500 பேர் வெளி மாநிலங்களுக்கு சென்றுள்ளனர்.
மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக, நாடு முழுவதும் “தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வு” எனும் “நீட்” தகுதித் தேர்வு முறையை மத்திய அரசு கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. இரண்டாவது ஆண்டாக இந்த முறை நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று காலை தொடங்கியது.
சி.பி.எஸ்.இ நடத்தும் இந்தத் தேர்வை, நாடு முழுவதும் 13,26,725 பேர் எழுதுகின்றனர். இதற்காக நாடு முழுவதும் 136 நகரங்களில் 2,225 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்தத் தேர்வை எழுதுகின்றனர். தமிழகத்தில் இவர்களுக்கு 10 நகரங்களில் தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இந்த ஆண்டு சுமார் 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 480 பேருக்கு தமிழகத்தில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டன. எஞ்சிய1,500 பேருக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.