தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்துவிட இயலாது: கர்நாடக அரசு
தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்துவிட இயலாது என்று உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
காவிரி வழக்கில் உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள அறிக்கையில், மழை பற்றாக்குறையால் உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் இறுதி வரை தமிழகத்திற்கு 116.7 டிஎம்சி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. காவிரியில் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டதைவிட கூடுதலாக 16.66 டி.எம்.சி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
காவிரி நீர் பங்கீட்டு வழக்கில் நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதில், “காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பை செயல்படுத்த ‘ஸ்கீம்’ (செயல் திட்டம்) ஒன்றை 6 வாரங்களுக்குள் மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும்” என உத்தரவிட்டது.
ஆனால், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் தொடர் பாக எவ்வித உறுதியான கருத்தையும் தெரிவிக்காமல் 6 வார காலம் மவுனம் காத்தது. இதனால் தமிழக அரசு, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை. நீதிமன்ற உத்தரவை அவமதித்த மத்திய அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ‘என உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது.
கடந்த ஏப்ரல் 9-ம் தேதி இவ்வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான மேலாண்மை திட்டத்தை மாநில அரசுகளுடன் ஆலோசித்து, மே 3-ம் தேதிக்குள் தீர்ப்பை அமல்படுத்துவதற்காக செயல்திட்ட வரைவு அறிக்கையை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.
ஆனால், வரைவு திட்டத்தை தயாரிக்க 2 வார அவகாசம் கேட்டு கடந்த வாரம் மத்திய அரசு மனு தாக்கல் செய்தது. பின்னர் அன்று மாலையே மத்திய அரசு மனுவை திரும்பப் பெற்றது. இந்நிலையில் உச்சநீதிமன்றம் வழங்கி இருந்த அவகாசம் இன்றுடன் முடியும் நிலையில், மீண்டும் வழக்கு விசாரணை நடந்தது. அப்போது ஆஜராகி பதிலளித்த மத்திய அரசு, காவிரி வாரிய வரைவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்யவில்லை.
அதற்கு பதிலாக, காவிரி வாரிய வரைவு திட்ட அறிக்கை தயாராக உள்ளது. அறிக்கை தயாரிப்பு பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளதால் அதனை தாக்கல் செய்ய மேலும் 10 நாட்கள் அவகாசம் வேண்டும் என கேட்டுள்ளது. பிரதமர் மற்றும் துறை சார்ந்த அமைச்சர்களிடம் ஒப்புதல் பெற 10 நாட்கள் அவகாசம் தேவைப்படுகிறது. பிரதமர் மற்றும் அமைச்சர்கள் தற்போது கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் உள்ளதால் அவர்கள் பிரசாரம் முடிந்து வந்த பிறகு ஒப்புதல் பெறுவதற்காக அவகாசம் தேவை என கேட்கப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளித்த உச்சநீதிமன்றம், வரைவு தயாரிக்கும் பணி முழுவதும் மத்திய அரசினுடையது என்றும், இதில் மாநிலங்களிடம் கலந்துரையாட வேண்டிய தேவை இல்லை என்றும் கூறியது.
இந்த விவகாரத்தில், தமிழக அரசு தரப்பின் கோரிக்கைகளை இதேபோல மத்திய அரசு கேட்டதா என்ற கேள்வியையும் உச்சநீதிமன்றம் எழுப்பியது.
எனவே, வரைவு அறிக்கை தயாரிக்க இதுவரை என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன, எதனால் தாமதம் என்பது குறித்த எழுத்துப்பூர்வமான அறிக்கையை வரும் மே 8ஆம் தேதி சமர்பிக்குமாறு மத்திய அரசிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் குடிநீருக்காக திறக்கப்படும் 5 டி.எம்.சி நீரில் ஒரு டி.எம்.சி நீர் மட்டுமே திறக்கப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்தது.
இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக உள்ளதாகவும் தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து, மீதமுள்ள 4 டி.எம்.சி நீரை குடிநீருக்காக திறக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அவ்வாறு செய்யாவிட்டால், இதற்கான காரணத்தை அம்மாநிலத்தின் தலைமை செயலாளர் உச்சநீதிமன்றத்தில் வந்து கூறும் சூழல் ஏற்படும் என்றும் அவர்கள் எச்சரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.