மலர்ந்த முகத்துடன் வாக்களித்த எடியூரப்பா: பாஜக., தொண்டர்கள் உற்சாகம்!

Published:

yeddurappa hanumantemple - 2026

பெங்களூரு: கர்நாடக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மாலை 6 மணி வரை நடைபெறும் இந்த வாக்குப் பதிவுக்காக, மாநிலம் முழுவதும் 55,600 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

அரசியல் தலைவர்கள், கட்சித் தொண்டர்கள் என பலரும் கடும் மன நெருக்கடிக்கு மத்தியிலும் மகிழ்ச்சியுடன் தாங்களும் வாக்களித்து, பொதுமக்களும் வாக்களிக்க உதவி வருகின்றனர். ஷிமோகா அருகே ஷிகார்பூரில் பாஜக முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப் பட்டுள்ள பி.எஸ். எடியூரப்பா தனது வாக்கை மகிழ்ச்சியுடன் பதிவு செய்தார். மத்திய அமைச்சரும், முன்னாள் முதல்வருமான சதானந்த கௌட புட்டூரில் வாக்களித்தார்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது கர்நாடக சட்டசபைத் தேர்தல். காங்கிரஸ் இல்லாத இந்தியா என்ற முழக்கத்துடன் மாநில தேர்தல்களைச் சந்தித்து வரும் பாஜக., கர்நாடகத்தில் இருந்து காங்கிரஸ் ஆட்சியை அப்புறப்படுத்துவோம் என்று சொல்லிக் கொண்டு அமித் ஷா, மோடி என தலைவர்கள் பலரைக் களமிறக்கி பிரசாரம் செய்தது. போட்டியாக, காங்கிரஸும் கர்நாடகத் தேர்தலை வரும் 2019 பொதுத் தேர்தலுக்கான முன்னோட்டமாகவே பார்க்கிறது என்பதால், அண்மைக் காலமாக தேர்தல்களில் பிரசாரம் செய்யாமல் ஒதுங்கியிருந்த சோனியா காந்தியே நேரடியாகக் களம் இறங்கும் நிலைக்கு இறங்கியது. ராகுல், சோனியா என கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு ஆதரவாக பெரும் பிரசாரமே செய்தனர்.

இந்நிலையில், முதல் ஆளாக தனது வாக்கைப் பதிவு செய்துவிட வேண்டும் என்ற ஆவலில் வெகு உற்சாகமாக வாக்குச் சாவடிக்கு வந்த முன்னாள் முதல்வரும் பாஜக., முதல்வர் வேட்பாளருமான எடியூரப்பா, காலை 7.05 மணிக்கெல்லாம் வாக்களித்தார். ஷிமோகா மாவட்டம் ஷிகாரிபுரா தொகுதியில் போட்டியிடுகிறார் பி.எஸ். எடியூரப்பா.

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது, பாஜக., மூன்று பிரிவாகக் கிடந்தது. எடியூரப்பா தனிக்கட்சியகாவும், ஸ்ரீராமுலு ஒரு புறமும், பாஜக., ஒருபுறமும் என மூன்றாக பிளவு பட்டிருந்த கட்சி, இப்போது ஒன்றாக கூடுதல் பலத்துடன் தேர்தலைச் சந்திக்கிறது. அதுவே பாஜக., வினருக்கு உற்ஸாகத்தை அளித்துள்ளது.

வாக்களிக்கும் முன்னதாக, எடியூரப்பா காலை 6 மணிக்கே தனது வீட்டு பூஜையறையில் அமர்ந்தார். கடவுளை வேண்டிக் கொண்டார். அவரது பூஜையில் குடும்பத்தினர் பங்கேற்றனர். அடுத்து தன் வீட்டுக்கு அருகே உள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்றார். அங்கே சிறப்பு பூஜையில் பங்கேற்றார். உடன் அவரது மகன் விஜயேந்திராவும் இருந்தார். அடுத்து 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியதும், முதல் ஆளாகச் சென்று தனது வாக்கைப் பதிவு செய்தார் எடியூரப்பா.

வெற்றி பெறும் நம்பிக்கை வெளித்தெரிய செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, பாஜக 150 தொகுதிகளின் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும், கர்நாடகாவில் எனது தலைமையில் ஆட்சி அமையும். இத்தேர்தலில் காங்கிரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்றார் உற்சாகமாக.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்!

தேர்தலை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் மாநில போலீசார் உள்பட 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்று பதிவாகும் ஓட்டுகள் வரும் 15-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img