பெரும் பரபரப்புக்கு நடுவே நிறைவடைந்தது கர்நாடக சட்டசபை தேர்தல். வரும் 15ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அப்போதுதான் இன்றைய வாக்குப் பதிவுக்கான முழு பரிணாமமும் தெரியும் என்றாலும், இப்போதே தேர்தலுக்குப் பிந்தைய வாக்குக் கணிப்புகளை தனியார் ஊடக நிறுவனங்கள் நடத்தத்தொடங்கிவிட்டன. அவற்றில் எல்லாம், தொங்கு சட்டமன்றம் அமையும் என்பதே பரவலாக அலசப் படுகிறது.
கர்நாடக சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தல் பெரும் அசம்பாவிதங்கள் இன்றி அமைதியாக நிறைவடைந்தது. வரும் 15ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. காலை 7 மணிக்கு ஆரம்பித்த வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.
காலை 10 மணி நிலவரப்படி, 10.45 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், மதியம் 1 மணி நிலவரப்படி, அது 36.9 சதவீதமாக இருந்தது. மாலை 4 மணி நிலவரப்படி 61.53 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன.
பெங்களூரைப் பொறுத்த அளவில், மத்தியப் பகுதியில் 40 சதவீதம், வடக்கு பெங்களூரில் 39 சதவீதமாக இருந்த வாக்குப்பதிவு, பொம்மனஹள்ளி உள்ளிட்ட தெற்கு பகுதிகளை உள்ளடக்கிய தென் பெங்களூரில் 40 சதவீதமாக இருந்தது. பெங்களூர் நகர்ப்புற மண்டல தொகுதிகளில் 42 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. பொதுவாக, பெங்களூரைப் பொறுத்த அளவில் இந்த வாக்குப் பதிவு குறைவுதான்!
தட்சின கன்னடாவில் வாக்குப் பதிவு அதிகம் இருந்தது. தென்கனராவில் 61%, பெலகாவி 58%, பாகல்கோட்டை 55%, விஜயபுரா 48%, கலபுர்கி 45%, பீதர் 42%, பெங்களூர் ஊரகம் 62%, ராம்நகர் 65%, மண்டியா 60%, ஹாசன் 61%, மைசூர் 52%, கதக் 53%, உடுப்பி 62% வாக்குகள் பதிவாகின.
வாக்குப் பதிவு சதவீதம் அதிகம் இருந்தால், அது பொதுவாக ஆட்சிக்கு எதிரான அலையாகவே பார்க்கப்படும். அது 80 சதவீதமாக இருந்தால், காங்கிரசுக்கு எதிராக அமைந்திருக்கும். ஆனால் 75 % வாக்குகள் பதிவாகியிருக்கும் என தெரியவருவதால், தொங்கு சட்டமன்றம் அமையும் என்று கூறப் படுகிறது.
இந்தத் தேர்தலில் 2,600க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களம் கண்டனர். 4.98 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். இதில் ஆண் வாக்காளர்கள் சுமார் 2.52 கோடி, பெண் வாக்காளர்கள் சுமார் 2.44 கோடி. 4,552 திருநங்கைகள். மாநிலம் முழுக்க 55,600 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. 3.5 லட்சம் பணியாளர்கள் தேர்தல் பணியாற்றினர்.
வாக்குப்பதிவு நிறைவடைந்ததும், வாக்குப் பெட்டிகள் பாதுகாப்பாக வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. வரும் 15ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கு முன்னோட்டமாக கர்நாடக சட்டசபை தேர்தல் பார்க்கப்படுகிறது. எனவே இந்தத் தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
1985ல் ஜனதா தளத்தின் ராமகிருஷ்ண ஹெக்டே அரசுக்குப் பிறகு, கர்நாடகாவில் தொடச்சியாக ஒரே கட்சிக்கு மக்கள் வாக்களித்து அடுத்தடுத்து ஆட்சியமைக்க வாய்ப்பு கொடுத்ததில்லை. அந்த நம்பிக்கையை உடைப்பது என்பதில் உறுதியாக இருந்தார் சித்தராமையா.
தேர்தலுக்கு முந்தைய பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாகவும், பாஜக 2வது இடத்தையும் பிடிக்கும் என்றும், மஜத கிங் மேக்கராக உருவாகலாம் என்றும் கூறியிருந்தன.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள், பாஜக., தனிப்பெரும் கட்சியாக முதலிடத்தையும், காங்கிரஸ் இரண்டாம் இடத்தையும், மஜத மூன்றாவதாகவும் வரும் என்று கூறுகின்றன.




