பெங்களூர்: இரட்டை இலக்கத்தில் எம்.பி.க்களை வைத்துக் கொண்டு நாட்டின் 11வது பிரதமராக 96 ஜூன் 1 முதல் 97 ஏப்.21 வரை இருந்த தேவ கௌடாவின் கணக்கைப் போல், இப்போது மகன் குமாரசாமியும் ஒரு கணக்கு போடுகிறார்.
96 நாடாளுமன்றத் தேர்தலின் போதும் பாஜக., காங்கிரஸ் அல்லாத கட்சிகளின் சார்பில், ஆனால் காங்கிரஸ் ஆதரவு அளிக்க பிரதமர் பதவி ஏற்றார் தேவகௌட. ஆனால் காங்கிரஸ் எக்காலத்திலும் தாங்கள் அதிகாரப் பதவியில் இல்லாமல் அடுத்தவருக்கு முட்டுக் கொடுத்து ஓட்டாத கட்சி என்பதால், அப்போதைய தேவைக்கு இந்தக் கூத்தை ஆதரித்தது. ஆனால் மிகக் குறுகிய காலத்தில் அதன் சாயம் வெளுத்தது.
அதுபோல், இப்போதும் காங்கிரஸ் பதவியில் இருந்து வெளியில் வந்தாலும், அது இப்போதும் 77 எம்.எல்.ஏ.க்களைப் பெற்றிருக்கும் பட்சத்தில் தங்களை விட பாதிக்கும் குறைவான எம்.எல்.ஏ.க்களைக் கையில் வைத்திருக்கும் குமாரசாமிக்கு, வேறு வழியில்லாமல் ஆதரவு அளித்தாலும், அது நிச்சயம் நீடிக்காது என்பதுதான் அரசியல் நோக்கர்களின் கருத்து.
இப்போது குமார சாமி அதனை மீண்டும் முயற்சி செய்து பார்க்கவுள்ளார். கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலாவை சந்திக்க நேரம் கேட்டு குமாரசாமி ஆளுநர் மாளிகைக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பிப்ரவரி 2006 முதல் 2007 அக்டோபர் வரை பாஜக ஆதரவுடன் முதல்வராக இருந்தவர் குமாரசாமி. நீ பாதி நான் பாதி என்று ஆளுக்குப் பாதி காலம் ஆட்சி செய்வோம் என்று பாஜக.,வுடன் கூட்டணி வைத்தார். ஆனால் பேசியது பேசியபடி நடந்துகொள்ளவில்லை. அதனால் ஆட்சி இழக்க வேண்டிவந்தது.
தற்போது காங்கிரஸ் ஆதரவுடன், கர்நாடகாவில் ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோருகிறார் குமாரசாமி. மேலும், 2 சுயேச்சை வேட்பாளர்கள் காங்கிரஸ்-மஜத கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
கர்நாடகா தேர்தலில் சுயேச்சையாக வெற்றி பெற்ற 2 வேட்பாளர்கள் காங்கிரஸ்-மஜத கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். துணை முதல்வர் பதவியும் மேலும் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் 20பேருக்கு அமைச்சர் பதவியும் கொடுக்கவுள்ளதாக பேசப்பட்டுள்ளதாம்.




