கர்நாடக மாநில திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு தொடர்பாக, டெல்லியில் முதலமைச்சர் குமாரசாமி இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. காங்கிரஸ் ஆதரவுடன் குமாரசாமி முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். முக்கிய பதவிகளுக்கு போட்டா போட்டி காரணமாக, அம்மாநிலத்தில் புதிய அமைச்சரவை அமைவதில், இருகட்சிகளிடையே இழுபறி நீடித்து வருகிறது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க, இன்று மாலை முதலமைச்சர் குமாரசாமிக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இச்சந்திப்பின் போது, பாஜக-வின் 4 ஆண்டு கால சாதனைக்கு பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவிக்கும் முதலமைச்சர் குமாரசாமி, கர்நாடக மாநில திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். தொடர்ந்து மத்திய எரிசக்தி துறை அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்தும் குமாரசாமி பேச்சுவார்த்தை நடத்துவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.



