‘கோ’ (Go) என்றால் போ, ‘வா’ என்றால் வா. அதற்காக, போனவுடன் திரும்பி வரக்கூடிய ஊர் அல்ல கோவா! விடுமுறையை உல்லாசமாகக் கொண்டாடுவதற்கான சுற்றுலாத் தலம். பல நாட்டுச் சுற்றுலாப் பயணிகளையும் வா… வா… என்று வரவேற்கிறது கோவா! அப்படி சுற்றுலாப் பயணிகளாக வந்து செல்பவர்கள் ஆண்டுக்கு சுமார் 20 லட்சம் பேர். அவர்களில் 5 லட்சம் பேர் வெளிநாட்டினர்!
இந்தியாவின் மிகச் சிறிய மாநிலம் கோவா. குறைவான மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில் நான்காவது இடத்தைப் பெறுகிறது. இந்தியாவின் மேற்கு கடற்கரைப் பகுதியான கொங்கணில் அமைந்துள்ள கோவா, வட திசையில் மகாராஷ்டிரா, கிழக்கில் கர்நாடகா, தெற்கில் அரபிக்கடல் ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்டுள்ளது. இங்குள்ள மக்கள் பேசும் மொழி கொங்கணி.
கலாசாரம்: வரலாற்றுப் புகழ் வாய்ந்த நகரமான மார்கோ, போர்ச்சுகீசியர்களின் கலாசாரத்தை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. கோவா மக்கள் பாரம்பரியத்தின் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டவர்கள். அதனாலேயே இங்கே இருக்கும் கட்டடங்களையும் அடையாளச் சின்னங்களையும் சிறப்பாகப் பராமரித்துவருகிறார்கள்.
விழாக்கள்: புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் மட்டுமின்றி விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, கிறிஸ்துமஸ், ஈஸ்டர், சம்ஸார் பட்வோ, சாம்பல் புதன் மற்றும் களியாட்டம் போன்ற விழாக்களும் இங்கே கொண்டாடப்படுகின்றன.
அழகிய கடற்கரைகள் 16: வட கோவாவில் ஆரம்போல், மாண்ட்ரெம், மோர்ஜிம், வகாட்டர், அஞ்சுனா, பாகா, காலங்குட், சிங்கரின், மிராமர் ஆகியனவும்; தென் கோவாவில் மஜோர்டா, பெடல்பாட்டிம், கோல்வா, பெனாலிம், வார்க்கா, கேவலோசிம், பலோலெம் ஆகிய ௧6 கடற்கரைகள் உள்ளன. இவற்றில் கோல்வா, அஞ்சுனா, காலங்குட், மிராமர் ஆகிய கடற்கரைகள் மிகவும் பிரபலமானவை.
பாகா கடற்கரையில் ‘பிரிட்டோஸ்’ என்ற அழகான குடில்கள் அமைந்துள்ளன.
அஞ்சுனா கடற்கரையும் சுற்றுலாப் பயணிகளுக்குப் பிடித்தமானதுதான். கோவாவின் தெற்கு பகுதிக் கடற்கரைகள் மிக அமைதியானவை. இங்கு, கடற்கரையோரம் அமைந்த அழகான தேவாலயங்கள் பழைமையை நம் கண் முன் கொண்டுவந்து நிறுத்துபவை.
கலை விரும்பிகளின் சொர்க்கம்: காலையில் சுற்றுலாப் பயணிகளால் குதூகலிக்கும் கோவா கடற்கரை, மாலையில் கலை நிகழ்ச்சிகளை விரும்பும் மக்களின் சொர்க்கமாக மாறிவிடுகிறது. பாரம்பரிய இசை, நடனம் என எல்லா நாளும் இங்கே திருவிழாதான்!
இது தவிர, ஆடம்பரப் படகுகளும் கவர்ந்து இழுக்கின்றன. மாலையில் தொடங்கும் படகுப் பயணங்கள், அந்தக்கால கோவா, போர்ச்சுகீசிய மக்களின் பாரம்பரிய நடனங்களுடன் சுற்றிக் காட்டுகின்றன.
நம்முடைய விடுமுறை நாட்களைக் கொண்டாட கோவா செல்லலாம். இன்னும் அதிகமாக புதிய அனுபவத்தைப் பெற விரும்பினால், கடற்கரைகளில் ஒரு குடிலை வாடகைக்கு எடுத்துத் தங்கலாம்.



