புது தில்லி: இரு முறை எழுதியும் நீட் கனவு நனவாகாததால், மனமுடைந்த 19 வயது மாணவர் 8வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
கடந்த சில வருடங்களாக, மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தகுதி நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த வருட சேர்க்கைக்காக, கடந்த மே மாதம் 6ஆம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடந்தது. இந்த தேர்வின் முடிவுகள் நேற்று நண்பகல் வெளியிடப்பட்டன. இதில் இந்த வருடமும் தேறாததால், தில்லியைச் சேர்ந்த மாணவர் மனமுடைந்து 8வது மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து துவராகா போலீஸ் துணை ஆணையர் சந்தோஷ் குமார் மீனா கூறியபோது, தில்லி துவாரகா செக்டர் பகுதியில் இருந்து நேற்று மாலை எங்களுக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் 8 மாடிக் குடியிருப்பு பகுதியில் இருந்து இளைஞர் ஒருவர் விழுந்து தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்குச் சென்று உடலைக் கைப்பற்றி சன்னி வேலி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்துள்ளோம்.
விசாரணையில், அந்த மாணவர் தில்லி துவாரகாவைச் சேர்ந்த 19வயது பிரணவ் மகேந்திரதா என்பது தெரிய வந்தது. நீட் தேர்வில் இரு முறை எழுதியும் தோல்வி அடைந்ததால்மனமுடைந்து 8-வது மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கடிதத்தில் இது தெரியவந்துள்ளது. தன்னால் நீட் தேர்வில் தேர்ச்சி அடைய முடியாததற்கு பெற்றோர் மன்னிக்க வேண்டும் என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார். பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே இது தற்கொலையா அல்லது வேறு யாரேனும் அவரை 8வது மாடியில் இருந்து தாக்கி தள்ளிவிட்டார்களா என்பது தெரிய வரும் என்று கூறியுள்ளார்.




