தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்ற போது, மாவட்ட ஆட்சியராக இருந்த வேங்கடேசனிடம் தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தியது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டம் வன்முறையாக மாறியதில் துப்பாக்கிச் சூடு நடத்தப் பட்டது. இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 13 பேர் பலியாயினர். பலர் காயம் அடைந்தனர். இந்தச் சம்பவத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதா என்பது குறித்து தேசிய மனித உரிமை ஆணையக் குழு எஸ்பி பிரிட்டோ பிரசாத் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நேற்று 3வது நாளாக இக்குழுவினர் விசாரணை நடத்தினர். துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டதாகக் கூறப்படும் தாசில்தார் சந்திரன், டெபுடி தாசில்தார்கள் சேகர், கண்ணன், துப்பாக்கிச்சூடு நடத்திய போலீசார், பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், அன்றைய தினம் பொறுப்பில் இருந்த ஆட்சியர் வேங்கடேசன், போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் ஆகியோரிடமும் விசாரணை நடத்த மனித உரிமை ஆணையக் குழுவினர் திட்டமிட்டிருந்தனர்.
அதன்படி 4வது நாளாக இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தி வரும் ஆணையக் குழுவினர், அப்போதைய ஆட்சியராக இருந்த வேங்கடேசனிடம் விசாரணை நடத்தினர். மேலும், துணை வாட்டாட்சியர், போலீசார் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கிச் சூட்டின்போது மாவட்ட ஆட்சியர் எங்கிருந்தார், என்ன நடவடிக்கை எடுத்தார் என்பன உள்ளிட்ட கேள்விகளைக் கேட்டுள்ளனர்.




