எல்ஐசியின் கட்டுப்பாட்டில் வருகிறது ஐடிபிஐ வங்கி. அதன் 51% பங்குகளை எல்ஐசி வாங்க ஐஆர்டிஏ ஒப்புதல் அளித்துள்ளது.
பொதுத் துறை வங்கியான ஐடிபிஐ கடும் நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து அந்த வங்கியின் 8% பங்குகளை வைத்துள்ள அரசின் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி தனது பங்குகளை அதிகரிக்க விருப்பம் தெரிவித்தது. இந்த வர்த்தக நடவடிக்கைக்கு காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையமான ஐஆர்டிஏ., நேற்று ஒப்புதல் அளித்தது.
இதன்படி 51% அளவுக்கு எல்ஐசி நிறுவனம், ஐடிபிஐ வங்கியின் பங்குகளை வைத்துக் கொள்ள முடியும். இந்திய ரிசர்வ் வங்கி, இந்திய பங்கு பண பரிவர்த்தனை வாரியம் ஆகியவற்றின் ஒப்புதலுக்குப் பிறகு ஐடிபிஐ.,யின் பங்குகளை எல்ஐசி வாங்கிக் கொள்ளும்.
தற்போதுள்ள 8% பங்குகளுடன் மேலும் 43% ஐடிபிஐயின் பங்குகளை எல்ஐசி நிறுவனம் வாங்கிக் கொள்ளும். ஐடிபிஐ வங்கியில் மத்திய அரசின் பங்குத் தொகை 86%ல் இருந்து 44% ஆக குறையும்.
51% பங்குகளை வாங்குவதால் எல்ஐசியின் கட்டுப்பாட்டுக்குள் ஐடிபிஐ வங்கி வர உள்ளது. எனினும் நிர்வாகப் பணிகளை எல்ஐசி மேற்கொள்ளாது என்று கூறப்படுகிறது. இருப்பினும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து விலகும் முதல் பொதுத் துறை வங்கியாக ஐடிபிஐ இருக்கும்.




