கன்யாஸ்திரி பலாத்காரம்; கைதாகிறார் பிஷப்!

திருவனந்தபுரம்: கேரளாவைச் சேர்ந்த கன்யாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் பிஷப் பிரான்கோ முல்லக்கல் என்பவர் கைதாகவுள்ளார். இது கேரளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம், கோட்டயம் குருவிலாங்காடு பகுதியில், மலங்காரா ஆர்தடாக்ஸ்  கத்தோலிக்க சர்ச் விடுதியிலுள்ள 44 வயதுடைய கன்யாஸ்திரி ஒருவர் ஜலந்தர் பிஷப் மீது கோட்டயம் மாவட்ட எஸ்.பி.,யிடம் ஒரு புகார் அளித்தார். அதில், 2014ஆம் ஆண்டு மே மாதம் குருவிலாங்காடு விடுதியில் வைத்து பிஷப் பிரான்கோ முல்லக்கல் தன்னை 13 தடவை பாலியல் பலாத்காரம் செய்ததாகத் தெரிவித்துள்ளார்.

இதை அடுத்து, போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், கன்யாஸ்த்ரீயை பிஷப் பாலியல் பலாத்காரம் செய்ததற்கான ஆதாரங்கள் சிக்கின. இதை அடுத்து, இந்த வார இறுதிக்குள் பிஷப் பிரான்கோவை கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.

பிஷப் குருவிலாங்காடு விடுதிக்கு 13 முறை வந்து தங்கி உள்ளதற்கான ஆதாரமாக, அந்த விடுதியின் வருகைப் பதிவேடில் குறிக்கப் பட்ட குறிப்புகள் உள்ளன. அவ்வாறு பிஷப் வந்து சென்றதை விடுதியில் தங்கி உள்ள மற்ற கன்யாஸ்திரிகளும் உறுதி செய்துள்ளனர். அந்த கன்யாஸ்த்ரி பிஷப் குறித்து சர்ச் மேலிடத்தில் புகார் தெரிவித்த போது, மற்றவர்கள் சிரித்தபடி நகர்ந்தனராம். இதனால் அந்த பிஷப்புக்கு மேலும் தைரியம் வந்தது என்றும், நிர்வாகமும் பிஷப்புக்கு உடந்தையாக இருந்தது என்பதும் கன்யாஸ்த்ரியின் குற்றச்சாட்டு.

கன்யாஸ்த்ரி இதனிடையே தனக்கு வேறு சர்ச்சில் இடமாற்றம் செய்து தருமாறு கோரி, வேறு சர்ச்சுக்குச் சென்றுள்ளார். ஆனால் அங்கும் வந்த பிஷப் பிரான்கோ முல்லக்கல் அந்த கன்யாஸ்திரியை பலாத்காரம் செய்தாராம்.

இதனிடையே அந்த கன்யாஸ்திரியை தாம் பணியிட மாற்றம் செய்ததால் தம் மீது அந்த கன்னியாஸ்திரி பொய் புகார் அளித்துள்ளதாக பிஷப் தரப்பில் கோட்டயம் மாவட்ட எஸ்.பி., அரிசங்கரிடம் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் அது பொய் புகார் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதை அடுத்து, அவரைக் கைது செய்வதற்கான நடைமுறைகளை போலீஸார் துவக்கினர்.