ஸ்ரீரங்க நாராயண ஜீயர் திருநாட்டை அலங்கரித்த பின்னர் அவரது திருவரசு பணிகள் நடைபெற்று வருகின்றன..
ஸ்ரீரங்கம் வடதிருக்காவேரி (கொள்ளிடம் ஆற்றங்கரை) அருகில் உள்ள மடத்தின் தோப்பில், ஆளவந்தார் சுவாமி திருவரசுக்கு தெற்கே, 49 ஆம் ஸ்ரீரங்கம் ஜீயர் பட்டம் திருமலை சுவாமிகள் திருவரசுக்கு வடக்கே நமது 50ஆம் பட்டம் சுவாமிகள் திருவரசு கொள்ள சித்தமாகி உள்ளது ..
நம் ஸ்ரீவைஷ்ணவ பேரொளி ராமானுஜர் ஸ்ரீரங்கம் கோவில் திருப்பணிகளை தொடர்ந்து செய்ய பல வித கொத்துக்கள் எனப்படுகின்ற தனித் தனி மேலாண்மைகளை உருவாக்கி வைத்தார் . அதில் ஒன்றான இந்த ஸ்ரீரங்க நாராயணர் மடம் உருவாக்கப்பட்டு, பிரதி வெள்ளிக்கிழமை புனுகு காப்பு நம்பெருமாளுக்கு சாற்றப்பட்டு திருஆலவட்ட (விசிறி சாமரம் வீசுதல்) கைங்கரியம், திருவாராதனமும் , நம்பெருமாள் முன்பு பாராயண கோஷ்டி கைங்கரியமும், கோவில் நகை பாதுகாப்பு அறை முக்கிய சாவி (பல சாவிகள் இருக்கும் ) அதற்கு முத்திரை இடும் அதிகாரம் போன்ற கைங்கரியங்களை இந்த மடத்தை அலங்கரிக்கும் ஜீயர் செய்து வர ராமானுஜர் பணித்துள்ளார்.
சுவாமி தற்போது வசித்து வந்த இந்த இடம் ராமானுஜர் காலத்துக்கு முன்பே சுமார் 9 ஆம் நூற்றாண்டில் சேர மன்னர்களால் உருவாக்கப்பட்டது. நாளை சுவாமிகளின் பல்லக்கை(கடைசி படத்தில்) பூக்களால் அலங்கரித்து உத்தர வீதி மற்றும் சித்திர வீதிகளில் உலா வந்த பின்னர் அவரது திருமேனியை அதில் ஏற்றி திருவரசு பண்ணப்படும் இடத்திற்கு மாலை நான்கு மணிக்கு எடுத்து செல்லப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தப் பூப் பல்லாக்கு “பிரும்ம ரதம் ” என வைகுண்டம் செல்லும் ரதம் என்பதாக அழைக்கப்படும். இதை தரிசிப்பது மிகுந்த புண்ணியம்.
– விஜயராகவன் கிருஷ்ணன்





