மிட்னாபூர் : மேற்கு வங்க மாநிலம் மிட்னாபூரில் நடந்த பாஜக., பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது பொது மக்களுக்காக அமைக்கப்பட்டிருந்த பந்தல் ஒன்று சரிந்து விழுந்தது. இதில் தொண்டர்கள் காயமடைந்தனர்.
பொதுக் கூட்டம் நடைபெற்ற இடத்தின் நுழைவுப் பகுதிக்கு அருகே மக்கள் மழையில் நனையாமல் இருக்க அமைக்கப்பட்டிருந்த பந்தலில் மோடியைப் பார்க்கும் ஆர்வத்தில், அதிக அளவு தொண்டர்கள் கம்புகளில் ஏறி அமர்ந்துள்ளனர். அதைக் கண்ட மோடி, தான் பேசிக் கொண்டிருந்த போதே, தொண்டர்கள் பந்தலின் மேல் ஏறி அமர வேண்டாம் என கேட்டுக் கொண்டே இருந்தார். ஆனால், தொண்டர்கள் மோடியைப் பார்த்த ஆர்வத்தில் அதைப் பொருட்படுத்தாமல் பந்தலில் மேலும் மேலும் ஏறி அமர்ந்தனர்.

அப்போது திடீரென அந்தப் பந்தல் சரிந்து விழுந்தது. இதை அடுத்து உடனடியாகத் தனது பேச்சை பாதியிலேயே நிறுத்திய மோடி, தனது பாதுகாப்பாளரை அழைத்து அங்கே சென்று பார்க்கச் சொன்னார். பிரதமரின் பாதுகாவலர்கள், மருத்துவர்கள் அந்தப் பகுதிக்கு ஓடி வந்து, காயமடைந்தவர்களை மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் 22 பேர் வரை காயமடைந்தனர். கூட்டம் முடிந்த பின்னர், மருத்துவமனைக்குச் சென்ற மோடி, அங்கே அனுமதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது காயமடைந்தவர் ஒருவருக்கு ஆறுதல் கூறியவர், அவரின் கைகளைப் பிடித்தபடி கண்ணீர் விட்டு அழுதார்.
I pray for the quick recovery of those injured due to the unfortunate accident during today’s rally. After the programme, I went to the hospital and spent time with the injured.
— Narendra Modi (@narendramodi) July 16, 2018



