இந்தியா, சீன எல்லையில், டோக்லம் பகுதியில் ஏற்பட்ட பிரச்னை ராஜதந்திரத்தால் தீர்க்கப்பட்டது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.
இந்தியா, சீனா எல்லை பகுதியில், விதிமுறைகளை மீறி சீன ராணுவம் செயல்பட்டு வருகிறது. முகாம்கள், சாலைகள் அமைப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
கடந்தாண்டு டோக்லம் பகுதியில் சீனா ராணுவம் சாலை அமைக்கும் முயற்சியை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியது. இதனால் சீன ராணுவம் அங்கு படைகளை குவித்தது. இந்தியாவும் பதிலுக்கு அதிகளவில் ராணுவ வீரர்களை அங்கு நிறுத்தியது.
இதனால் அங்கு போர் பதற்றம் உண்டானது. சுமார் 75 நாட்களாக இந்த சூழல் நீடித்த நிலையில், இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தியதன் மூலம் படைகள் வாபஸ் பெறப்பட்டன. சர்ச்சைக்குரிய இடத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என சீனாவிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், டோக்லம் பகுதியில் சீன ராணுவம் மீண்டும் சாலைப்பணிகளை தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அமெரிக்காவும் இதுபற்றி தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இதுகுறித்து மக்களவையில் நேற்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. இதற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பதில் அளித்து பேசுகையில், ‘‘டோக்லம் பகுதியில் கடந்தாண்டு நடந்த அமைதிப் பேச்சுவார்த்தைக்கு பின்னர் ஒரு அங்குலம் நிலத்தை கூட சீனா ஆக்கிரமிக்கவில்லை.
டோக்லம் விவகாரம் ராஜதந்திர நடவடிக்கை மூலம் தீர்க்கப்பட்டு விட்டது. இந்தியா, சீனா தலைவர்கள் இடையேயான நல்லுறவு, தூதரக நடவடிக்கைகள் போன்றவற்றால் இது சாத்தியமானது. எல்லை பிரச்னை தொடர்பாக சீனாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது’’ என்றார்.



