புது தில்லி: கோயிலுக்குச் செல்லும் ஹிந்துப் பெண்களை இழிவுபடுத்தும் ‘மீஷ’ என்ற மலையாள நாவலைத் தடை செய்ய வேண்டும் என்று கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், நாவலை தடை செய்ய மறுத்து விட்டது.
மலையாள எழுத்தாளர் ஹரீஷ், மலையாள இதழான மாத்ருபூமியில் தொடராக மீஷ என்ற நாவலை எழுதினார். இது தொடராக எழுதப் பட்ட போதே பலத்த எதிர்ப்பைச் சந்தித்தது. இதைத் தொடர்ந்து இந்த நாவலை தனி புத்தகமாக்க மாத்ருபூமி முயன்றது. ஆனால் அதற்கு எழுந்த கடும் எதிர்ப்பை அடுத்து, அந்த நாவலை வெளியிடுவதில் இருந்து பின்வாங்கியது. ஆனால், டிசி புக்ஸ் அந்த நாவலை பதிப்பித்து, வெளியிட்டது. இதற்கும் பலத்த எதிர்ப்பு எழுந்தது. போராட்டமும் நடந்தது.
இந்த புத்தகத்தை தடை செய்ய வேண்டும் என ராதாகிருஷ்ணன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகள் ஏ எம் கன்வில்கர், டிஓய் சந்திரசூட் அடங்கிய அமர்வு முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், புத்தகங்களுக்கு தடை விதிப்பதால், சுதந்திரமாக கூறப்படும் கருத்துகளை அது பாதிக்கும் எனக் கூறி அதனைத் தள்ளுபடி செய்து உத்தர விட்டனர்.