இந்திரா காந்தி பிரதமராக இருந்த சமயம் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தினார். அது எமர்ஜன்சிக்கு முந்தைய காலகட்டம். இதைக் கண்டித்து மொரார்ஜி தேசாய் உள்ளிட்ட தலைவர்கள். வீட்டிலிருந்து பாராளுமன்றத்துக்கு நடந்து வந்து எதிர்ப்பைக் காட்டினர்.
அடல்ஜி ஒரு மாட்டு வண்டியைத் தானே ஓட்டிக் கொண்டு பாராளுமன்றம் வந்தார். பாராளுமன்ற சாலையில் மெல்லச் செல்லும் வண்டிகளுக்கு (slow moving vehicles) அனுமதி இல்லை என்று சாலை தொடக்கத்திலேயே காவலர்கள் மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர். நடந்து பாராளுமன்றத்தின் உள்ளே போனார் அடல்ஜி.
பெட்ரோல் செலவைக் குறைக்க என்று சொல்லி பிரதமர் இந்திராகாந்தி 4 குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் பாராளுமன்றம் வந்தார். பாராளுமன்றத்தின் வாசலில் அவர் இறங்கியதும் சல்யூட் அடித்து உள்ளே அனுப்பினர் காவலர்.
உள்ளே கேள்வி நேரம் முடிந்ததும் தன் வண்டி பறிமுதல் செய்யப்பட்ட பிரச்சினையை எழுப்பினார் அடல்ஜி. “அது மெல்லச் செல்லும் வண்டி, ஆகவே காவலர் பிடிக்கத்தான் செய்வார்கள். இத்தனை நாள் பாராளுமன்ற உறுப்பினராக இருப்பவருக்கு இது தெரியாதா?” என்று ஏளனமாகக் கேட்டார் இந்திராகாந்தி.
“மாட்டு வண்டி மெல்லப்போகும் என்பது ஓட்டி வந்த எனக்கே தெரியும். வண்டிக்காரர் ஓட்ட பிரதமர் உட்கார்ந்து வந்த குதிரை வண்டி எத்தனை கிலோமீட்டர் வேகத்தில் போகும்?” என்றார் அடல்ஜி.
பதில் இல்லை. சபாநாயகரிடம் சொன்னார் “குதிரை வண்டி மெல்லச் செல்லும் வண்டியா இல்லையா என்று ஆராய்ந்து சீக்கிரம் சொல்லுங்கள். தாமதமானால் நான் உரிமைப் பிரச்சனைக்கு நோட்டீஸ் கொடுப்பேன்.”
“எதற்கு உரிமைப் பிரச்சனை?” என்றார் சபாநாயகர்.
“மெல்லச் செல்லும் வண்டியில் பாராளுமன்றத்துக்கு வர பிரதமருக்கு மட்டும் உரிமை உள்ளதா அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் உரிமை உள்ளதா என்று விவாதிப்போம்” என்றார்.
மொரார்ஜி உள்ளிட்ட தலைவர்களின் சற்றே காரசாரமான பேச்சுக்களுக்குப் பிறகு அவை மதிய உணவுக்காக ஒத்தி வைக்கப்பட்டது. உணவு முடித்து வெளியே வந்தார் அடல்ஜி. வாசலுக்கு அருகே பார்க்கிங் இடத்தில் அவரது மாட்டு வண்டி. காளைகள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தன. கிராமத்தானான ஒரு போலீஸ்காரர் மாடுகளுக்கு வைக்கோல் போட்டு தடவிக்கொடுத்துக் கொண்டிருந்தார்.
என்னவென்று கேட்டால் மெல்லச் செல்லும் வண்டி சம்பந்தப்பட்ட உத்தரவு அப்போதைக்குத் தளர்த்தப்பட்டது என்றார் தில்லி போலீஸ் கமிஷனர். ஆனால் பாதுகாப்பு கருதி மெல்லச் செல்லும் வண்டியில் வரவேண்டாம் என்றார். “பிரதமர் மட்டும் வரலாமா அவருக்கு என்ன நிரந்தர விதிவிலக்கா” என்று கேட்டார் அடல்ஜி.
“இல்லை ஐயா! நாளை வரும்போதே காரில் வருவதாக பிரதமர் சொல்லிவிட்டார்.” என்றார் கமிஷனர்.
ஹே ஹேய் என்று வண்டியை ஓட்டிக் கொண்டு அன்று மாலை வீடு போனார் அடல்ஜி. மறுநாள் பாராளுமன்றத்துக்கு வந்தபோது பேருந்தில் வந்து இறங்கினார்




