புது தில்லி : ‘குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள், தண்டனை பெற்றவர்களை தேர்தலில் நிறுத்தினால், அவர்கள் சார்ந்த கட்சியின் சின்னத்தை முடக்க உத்தர விடலாமா’ என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கிரிமினல் மற்றும் பிற வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள், தேர்தலில் போட்டியிட தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை, தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அமர்வு விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்தபோது, அமர்வு கூறியதாவது: மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், குற்ற வழக்கில் தண்டனை பெற்றால், அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுகின்றனர்.அதே நேரத்தில் குற்ற வழக்கில் தொடர்புடையவர்கள், தண்டனை பெற்றவர்கள், அரசியலில் ஈடுபடுவதற்கு எந்தத் தடையும் இல்லை. அரசியலில் கிரிமினல்கள் இருப்பது என்பது, அரசியலை அழுக வைத்துவிடுகிறது.
குற்றப் பின்னணி உள்ளவர்களை தேர்தலில் நிறுத்தினால், அந்தக் கட்சியின் சின்னத்தை முடக்கும் நடவடிக்கையை எடுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடுவது குறித்தும் ஆராயப்படும் என்று இந்த அமர்வு கூறியது.
இதை அடுத்து இந்த வழக்கின் விசாரணை வரும் 28ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.




