ஸ்டிக்கர் அரசியலில் ஈடுபடுகிறார்கள் என்று தமிழகத்தை, குறிப்பாக அ.தி.மு.க.வினர் குறித்து கேலி பேசிய கேரளத்தவர்கள் இப்போது மார்க்சிஸ்ட் கட்சி நடத்தும் வெள்ள நிவாரண ஸ்டிக்கர் அரசியலைக் கண்டு காறித் துப்புகிறார்கள். அதுவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பகிரங்கமாக மார்க்சிஸ்ட் மீது திருட்டுக் குற்றச்சாட்டை சுமத்தியிருக்கிறது. இதனால் கேரள அரசியல் சந்தி சிரிக்கிறது.
கேரளாவில் ஆளும் இடது முன்னணியின் முக்கிய அங்கமாக விளங்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வெள்ள நிவாரண நடவடிக்கைகள் தொடர்பாக குடுமிப்பிடி சண்டை உருவாகியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேரள வெள்ள நிவாரண பொருட்களைத் திருடி, மூணாறில் உள்ள கட்சி அலுவலகத்தில் பதுக்கி வைத்துள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பகீர் குற்றச்சாட்டைக் கூறியுள்ளது.
இடுக்கி மாவட்ட ஆட்சியருக்கு நிவாரணத்திற்காக வந்த பொருட்கள் அனைத்தும் இடுக்கி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்துக்கு கடத்தி செல்லப்பட்டுள்ளது. அந்தப் பொருட்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முத்திரை பதித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொடிகளுடன் வாகனங்களில் எடுத்துச் சென்று விநியோகிக்கப் படுகின்றன என்று குற்றம் சாட்டியுள்ளது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.
மூணாறு மாவட்ட ஆட்சியருக்கு இந்தியா முழுவதிலும் இருந்து தன்னார்வலர்களாலும், தொண்டு நிறுவனங்களாலும் அனுப்பப்பட்டு வரும் நிவாரணப் பொருட்கள் நேரடியாக மூணாறு மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்துக்கு கடத்தப்பட்டு வருகிறது. கேரளாவுக்கு அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்களில் பாதிக்கும் மேற்பட்டவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகங்களில் பதுக்கி வைக்கப்பட்டு, துயரடையும் மக்களை சென்றடையாமலேயே முடங்கிக் கிடப்பதாக குற்றம் சாட்டுகிறது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.
பலதரப்பட்ட மக்கள் தங்கள் அதிருப்தியையும் புகாரையும் ஆட்சியர் அலுவலகத்தில் சொல்லி கண்ணீர் சிந்துகின்றனர். இதனால், கடுப்பான இடுக்கி மாவட்ட துணை ஆட்சியர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை அழைத்து கண்டித்தாராம்.
கடந்த சனிக்கிழமை (ஆக.25) அன்று தமிழகத்தில் இருந்து சென்ற நிவாரணப் பொருட்கள் அடங்கிய 3 லாரிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வழிமறித்து தங்கள் கட்சி அலுவலகங்களுக்கு கடத்த முன்றனர். அப்போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்கள் அதை தடுத்து நிவாரண பொருட்கள் மக்களை சென்றடைய வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.
இப்படி கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள்ளேயே அடிமட்டத் தொண்டர்களிடம் ஏற்பட்டுள்ள குடுமிப் பிடிச் சண்டையால், கேரள அரசியல் கலகலத்துக் காணப்படுகிறது. ஆனால் இதை மறைக்க, ரூ.700 கோடி மேட்டரை இன்னும் கையில் பிடித்துக் கொண்டிருக்கிறார் முதல்வர் பிணரயி விஜயன்.






