புது தில்லி : 2019 தேர்தலில் விளம்பர ரீதியாக இயங்கும் போது ஆட்சேபனைக்கு உரியவற்றை முடக்க சமூக வலைத்தளங்கள் தயாராக வேண்டும்.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதற்காக சமூக வலைதளங்களான பேஸ்புக், கூகுள், டுவிட்டர் ஆகிய நிறுவனங்களுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
தேர்தல் நேரங்களில் அரசியல் சார்ந்த விளம்பரங்கள், பிரசார வாசகங்கள் ஆகியவற்றைக் கண்காணிக்கவும், போலியான செய்திகள், அவதூறு பரப்பும் வகையிலான விமர்சனங்கள், ஆட்சேபணைக்குரிய வகையிலான கருத்துக்கள் ஆகியவற்றை முடக்கவும் தீர்மானிக்கப் பட்டுள்ளது.
தேர்தல் காலங்களில் அரசியல் சார்ந்த விளம்பரங்களை ஆன்லைனில் பதிவிடுவதை தடுக்கவும் முடிவு செய்யப் பட்டுள்ளது. சில நிறுவனங்கள் அரசியல் கட்சிகள் அல்லது வேட்பாளருக்கு ஆதரவாக பணம் அளித்து விளம்பரம் கொடுப்பதாகவும், பணம் கொடுத்து சில வாசகங்களை பதிவிடுவதாகவும் பேஸ்புக், வாட்ஸ்ஆப், கூகுள், டுவிட்டர் நிறுவனங்கள் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளன.
இதனிடையே, ஆபாசக் கருத்துக்கள் எதிர்மறை விளம்பரங்களை முடக்கும்படி சமூக வலைதளங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது தேர்தல் ஆணையம். தனிநபர் விமர்சனம், ஆபாசக் கருத்துகள், அவதூறு பரப்புதல் இவற்றை தேர்தலுக்கு 48 மணி நேரம் முன்பே தடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.




