அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தபோது ஓரிருமுறை வேளாங்கண்ணி மாதா கோயில் திருவிழாவுக்குப் போயிருக்கிறேன். அப்போதெல்லாம்
இப்படி வெளி ஊர்களிலிருந்து நடந்துவரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைவாகத்தான் இருக்கும். கேரளாவிலிருந்து நிறையபேர் வருவார்கள். அப்படியிருந்தும் செப்டம்பர் 8 ஆம் தேதி திருவிழாவின்போது
சப்பரத்தைச் சுற்றி பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் திரண்டு சுழல்வது மனிதக் கடல் பொங்கி வருவதுபோல் காட்சியளிக்கும்.
பாண்டிச்சேரியில் இருக்கும் ஃப்ரெஞ்ச் இன்ஸ்டிட்யூட் வேளங்கண்ணி திருவிழா குறித்து ஒரு சிறு நூலை வெளியிட்டிருக்கிறது. ப்ரிஜிட் செபஸ்தியா எழுதியுள்ள அந்த நூல் இந்தத் திருவிழாவின் வரலாற்றையும் அது நடைபெறும் முறைகளையும் அதில் கலந்துள்ள இந்து மதக் கூறுகளையும் விவரிக்கிறது.
வெளியூர்களிலிருந்து வேண்டுதலின்பேரில் நடந்துவரும் பக்தர்கள் நீலம், பச்சை, காவி என ஏதோ ஒரு நிறத்தில் உடையணிந்துகொள்ளவேண்டும். அவர்கள் நாற்பது நாட்கள் விரதமிருக்கவேண்டும். நடந்துவரும்போது செருப்பு அணியக்கூடாது. மது அருந்தவோ புகை பிடிக்கவோ கூடாது. அசைவ உணவையும் தாம்பத்ய உறவையும் தவிர்க்கவேண்டும்.வேளாங்கண்ணியை நெருங்கியதும் குளித்து புத்தாடை உடுத்தி அதன்பிறகே தேவாலயத்துக்குச் சென்று வழிபடவேண்டும்.
இந்த நடைமுறைகள் இந்து மத வழக்கங்களைப்போல இருப்பதால் இதற்கு 18 ஆம் நூற்றாண்டில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இப்படியான வழக்கங்களை மட்டுமின்றி இந்து மதத்தின் சாதிய படிமுறையையும் மதுரை மிஷன் என அழைக்கப்பட்ட ஏசுசபை பாதிரிமார்கள் பின்பற்றினர். மதமாற்றம் தடையின்றி நடக்க வேண்டு மென்றால் இந்து மத நம்பிக்கைகளைத் தொந்தரவு செய்யக்கூடாது என அவர்கள் நினைத்தனர். அதை பாண்டிச்சேரியிலிருந்த கப்பூச்சியன் சபையினர் கடுமையாக எதிர்த்தனர். கிறித்தவ வரலாற்றில் ‘ Querelle des Rites Malabar’ எனக் குறிக்கப்படும் அந்த சர்ச்சை இந்தியா முழுவதும் பரவியது. கடைசியில் போப்பாண்டவர் தலையிட்டு அதில் சமரசம் செய்துவைக்கும் நிலை ஏற்பட்டது.
“ இந்து மதத்தில் கோயிலுக்குப் போவதற்குமுன் குளித்து சுத்தம் செய்துகொள்வது வெறுமனே உடல் தூய்மை தொடர்பானதல்ல. அது , தீய சக்திகளின் திருஷ்டியிலிருந்து விடுபடுவது. இதை மூட நம்பிக்கையாகக் கருதிய பாதிரியார்கள் வேளாங்கண்ணிக்கு வரும் பக்தர்கள் நீராடுவதைத் தடுப்பதற்கு மாதா குளத்தை சிமெண்ட் பலகைகளால் மூடிப்பார்த்தனர். ஆனால் மக்களோ கடலில் நீராடிவிட்டு வர ஆரம்பித்துவிட்டனர்” என குறிப்பிடுகிறார் ப்ரிஜிட்.
இந்துக் கோயில்களில் நடக்கும் மண்டகப்படிகளைப்போலவே இங்கும் நடக்கிறது. ஆகஸ்ட் 29 ஆம் தேதி துவங்கும் மண்டகப்படி செப்டம்பர் 10 வரை நடக்கிறது.
மண்டகப்படி பின்வரும் முறைப்படி நடப்பதாக ப்ரிஜிட் கூறுகிறார் ( பக்கம் 32-33) :
ஆகஸ்ட் 29 – ஆர்ய நாட்டு செட்டியார்
ஆகஸ்ட் 30 – அகமுடையார், தேவர்
ஆகஸ்ட் 31- பனைமர நாடார்
செப்டம்பர் 1- தென்னைமர நாடார்
செப்டம்பர் 2- கருங்கண்ணி திருச்சபை
செப்டம்பர் 3- உடையார்
செப்டம்பர் 4- ஆங்கிலோ இந்திய குடும்பம்
செப்டம்பர் 5- திருச்சி எஸ்.எம்.அந்தோணி குடும்பம்
செப்டம்பர் 6- வேளாங்கண்ணி ஆர்ய நாட்டு செட்டியார்
செப்டம்பர் 7- நாகை ஆர்ய நாட்டு செட்டியார்
செப்டம்பர் 8,9,10- இரவு ஊர்வலம்- மரியஜோசப் குடும்பம், ஆசாரி, தச்சர் உள்ளிட்டோர்
ப்ரிஜிட்டின் நூலைப் படிக்கும்போதும், கிழக்குக் கடற்கரை சாலை நெடுகிலும் அணி அணியாக நடந்துபோகும் பக்தர்களைப் பார்க்கும்போதும் தமிழ்நாட்டில் ஆரோக்கிய மாதா வழிபாட்டை பரவச் செய்வதில் உள்ளூர் வழிபாட்டு முறைகளும், நம்பிக்கைகளும் கலந்து புனையப்பட்ட நடைமுறைக்கு இருக்கும் முக்கியத்துவம் புரிகிறது. கூடவே, இந்து மதத்தின் சடங்குகளை உள்வாங்கியதோடு நின்றிருந்தால் சிக்கலில்லை, சாதிய படிநிலையையும் உள்வாங்கியதுதான் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் பெருமளவில் கிறித்தவத்தைத் தழுவாமல் இருப்பதற்குக் காரணமோ என்ற ஐயமும் எழுகிறது.
புயலில் சிக்கித் தவித்த போர்த்துகீசிய மாலுமிகளைக் கரை சேர்த்த ஆரோக்கிய அன்னை, சாதியெனும் சூறாவளியில் சிக்கித் தவிக்கும் மக்களை கரை சேர்க்கக்கூடாதா?
– ரவிக்குமார் (எழுத்தாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலர்)
{பேஸ்புக்கில் பகிரப்பட்டது}




