புது தில்லி : லண்டன் செல்வதற்கு முன் தன்னை சந்தித்ததாக மல்லையா கூறியதை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி மறுத்துள்ளார்.
ரூ.9 ஆயிரம் கோடி கடன் மோசடியில், இந்தியாவுக்கு நாடு கடத்தும் வழக்கு தொடர்பாக விஜய் மல்லையா லண்டன் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது கடனை திருப்பி கொடுப்பது தொடர்பாக நிதியமைச்சர் அருண் ஜேட்லியை சந்தித்ததாகக் கூறினார். ஆனால் விஜய் மல்லையாவின் கூற்றை அருண் ஜேட்லி மறுத்துள்ளார்.
இதுகுறித்து நிதி அமைச்சர் அருண் ஜேட்லி வெளியிட்டுள்ள அறிக்கையில் என்னை சந்தித்தாக மல்லையா கூறியது உண்மைக்கு மாறானது. 2014ஆம் ஆண்டு முதல் தற்போது வரை மல்லையாவை சந்திக்க நான் எந்த அனுமதியும் வழங்கவில்லை. தனிப்பட்ட முறையில் அவரை சந்திக்கவே இல்லை. அவர் மாநிலங்களவை உறுப்பினராக இருந்ததால், நாடாளுமன்ற வளாகத்தில் அவரை சந்தித்திருக்கிறேன்.
பிரச்னைக்கு தீர்வு காண தனக்கு உதவுமாறு நாடாளுமன்ற வளாகத்தில் என்னிடம் ஒரு முறை உதவி கோரினார். என்னை அணுகுவதை விட வங்கியை அணுகுவது சரியானது என அவருக்கு அறிவுறுத்தினேன். அவர் மாநிலங்களவை எம்.பி., பதவியை தவறாக பயன்படுத்தியுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே ரூ.9 ஆயிரம் கோடி கடன் மோசடியில், விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தும் வழக்கில் டிசம்பர் 10ஆம் தேதி லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.
விஜய் மல்லையா இந்திய வங்கிகளில் ரூ. 9,000 கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடு தப்பிச் சென்று தற்போது லண்டனில் தஞ்சம் அடைந்துள்ளார். மல்லையா மீதான நிதி மோசடி வழக்குகளை சிபிஐ விசாரித்து வருகிறது. லண்டனில் உள்ள அவரை இந்தியா கொண்டு வர லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் கோர்ட்டில் இந்தியா சார்பில் வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கில் விஜய் மல்லையா இன்று ஆஜரானார். அப்போது மும்பை ஆர்தர் ரோடு சிறையில் விஜய் மல்லையாவை அடைப்பது தொடர்பாக வீடியோவை நீதிபதி ஆய்வு செய்தார். வீடியோவில் சிறை வசதிகள் தனக்கு திருப்தி அளிப்பதாக நீதிபதி கூறியதாகத் தெரிகிறது.
இது குறித்து மல்லையா செய்தியாளர்களிடம் கூறுகையில், கடனை திருப்பி செலுத்த தயாராக உள்ளேன். இதற்கான திட்டத்தை முன்வைத்துள்ளேன். இதனை நீதிமன்றம் ஆலோசிக்கும் என நம்புகிறேன்… வங்கிக்கடன் பிரச்னையை தீர்ப்பதற்காக அருண் ஜேட்லியை லண்டன் வரும் முன்பு சந்தித்தேன். கடனை திருப்பி கொடுப்பது தொடர்பான கடிதத்திற்கு வங்கிகள் எதிர்ப்பு தெரிவித்தன என்றார்.




