புது தில்லி: பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனை கொல்லப் போவதாக வாட்ஸ்அப்பில் செய்தி அனுப்பிய 2 பேர் உத்தராகண்ட் மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு உத்தராகண்ட் மாநிலம் தர்சுலா நகரில் திங்கள்கிழமை நேற்று ராணுவம் சார்பில் மருத்துவ முகாம் நடத்தப் பட்டது. இதனை தொடங்கி வைக்க வந்திருந்தார் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
இந்த நிகழ்வுக்கு ஒரு நாள் முன்பு, ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு நபர் வாட்ஸ்அப் குழுவில் தாம் நிர்மலா சீதாராமனை சுட்டுக் கொல்லப் போவதாகவும், நாளையே அவருக்கு கடைசி நாள் என்றும் ஒரு செய்தியை பதிந்தார். அதற்கு அந்தக் குழுவில் ஒரு நபர் பதில் அளித்துள்ளார்.
இந்த உரையாடல் உளவுத்துறை கவனத்துக்குச் சென்று, அவர்கள் மூலம் தர்சுலா நகர் போலீஸார் வசம் சென்றது. இதை அடுத்து சம்பந்தப்பட்ட நபர்களைக் கண்டறிந்த காவலர்கள் உடனடியாக இருவரையும் கைது செய்தனர்.
அவர்கள் இருவர் மீதும் கொலை மிரட்டல் விடுத்தல் பிரிவு 506 மற்றும் தகவல் தொழில்நுட்பக் குற்றங்கள் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களின் பின்னணி, அவர்களிடம் ஏதேனும் வெடிபொருள்கள் உள்ளனவா போன்ற விசாரணைகள் நடைபெற்று வருகிறது.
இதனிடையே அந்த வாட்ஸ்அப் குழுவின் அட்மின் தொடர்பாகவும் விசாரணை நடக்கிறது. அவர்கள் இருவரும் போதை தலைக்கேறி இவ்வாறு செய்துள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.




