கோட்டயம்: கன்யாஸ்த்ரியை பாலியல் பலாத்காரம் செய்த பிஷப் ப்ராங்கோவை கைது செய்யும் வரை போராடுவோம் எனக் கூறி, தங்கள் போராட்டத்தை கடந்த இரு வாரங்களாக மேற்கொண்டு வந்த கன்யாஸ்த்ரீகள், பிஷப் கைது செய்யப்பட்டதாக வந்த அதிகாரபூர்வ தகவலை அடுத்து இன்று தங்களின் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.
கேரள கன்யாஸ்த்ரீ ஒருவர், பிஷப் பிராங்கோ மீது புகார் கொடுத்து, நீண்ட இழுபறிக்குப் பின் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக போலீஸார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த 87 நாட்களுக்குப் பின் விசாரணைக்கு ஆஜரானார் பிஷப் ப்ராங்கோ. ஆனால் பிஷப்பை கைது செய்ய வேண்டும் என்று கன்யாஸ்த்ரிகள் சிலர் தொடர் போராட்டத்தை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், பிஷப் மீது தகுந்த ஆதாரங்கள் இருப்பதால், அவற்றின் அடிப்படையில் பிஷப்பை கைது செய்வதாக அறிவித்த காவல் துறையினர் அவரைக் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
வெள்ளிக்கிழமை நேற்றே பிஷப் கைது செய்யப்பட்ட போதிலும், கன்னியாஸ்திரிகள் தங்களின் போராட்டத்தை கைவிடாமல் இருந்தனர். இந்நிலையில் இன்று அதிகாரபூர்வமாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டு, மூன்று நாள் காவலில் எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, 14 நாள் போராட்டத்துக்குப் பின்னர் கன்னியாஸ்திரிகள் மற்றும் அவர்களின் ஆதரவு அமைப்புகள் போராட்டத்தை இன்று விலக்கிக் கொண்டனர். பிஷப் பிராங்கோ கைது செய்யப்பட்டது, தங்களின் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி என்று அவர்கள் கூறியுள்ளனர்.




