திருவனந்தபுரம்: ஒரு பாலின சேர்க்கையாளர்களான இரண்டு பெண்கள் ஒன்றாகச் சேர்ந்து வாழ அனுமதி அளித்து கேரள உயர் நீதிமன்றம் புரட்சிகரமான தீர்ப்பை அளித்துள்ளது.
கேரள உயர் நீதிமன்றத்தில், ஸ்ரீஜா என்பவர் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், தன்னுடன் சேர்ந்து வாழ்ந்து வந்த அருணா என்பவரை அவரது பெற்றோர் பிரித்துக் கொண்டு சென்று, அவர்களின் வீட்டில் வலுக்கட்டாயமாக அடைத்து வைத்துள்ளனர் என்று குற்றம் சாட்டியிருந்தார்.
மேலும், அந்த மனுவில் ஓரினச் சேர்க்கை குற்றம் ஆகாது என்று உச்ச நீதிமன்றமே தீர்ப்பு வழங்கியுள்ளதைக் குறிப்பிட்டுள்ளார்.
இதை அடுத்து மனுதாரரின் கோரிக்கையை ஏற்று, அருணாவை ஆஜர்படுத்தும் படி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நீதிமன்ற உத்தரவை அடுத்து அருணாவை போலீஸார் கேரள உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அருணா உயர் நீதிமன்றத்தில் அப்போது தெரிவிக்கையில், தாம் ஸ்ரீஜாவுடன் சேர்ந்து வாழ விரும்புவதாகக் கூறினார். இதை அடுத்து ஸ்ரீஜா, அருணா இருவரும் சேர்ந்து வாழ அனுமதி அளித்து கேரள உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.