புது தில்லி: கள்ளத் தொடர்பு, விவாகரத்துக்கான அடிப்படை அம்சமாக நீடிக்கிறது, ஆனால் தண்டனைக்கு உரிய குற்றம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது.
இந்திய தண்டனைச் சட்டத்தின் 497ஆவது பிரிவின்படி, கள்ளத் தொடர்பு தண்டனைக்குரிய கிரிமினல் குற்றம் என்று வரையறுக்கப் பட்டுள்ளது. இருப்பினும், கணவனின் ஒப்புதலுடன் நடைபெற்ற கள்ளத்தொடர்பு என்றால், அது தண்டனைக்குரிய குற்றமில்லை என்கிறது இந்தப் பிரிவு.
குற்றத்தினால் பாதிக்கப்படுபவர் பெண் என்பதாலும், இத்தகைய குற்றத்தை பெண் இழைப்பதில்லை என்ற அடிப்படையிலும் கள்ளத் தொடர்பில் ஈடுபடும் ஆணுக்கு மட்டும் தண்டனை விதிக்கும் இந்தப் பிரிவு, திருமணமான பெண்ணுக்கு தண்டனை தருவதில்லை. இந்நிலையில் இந்த 497ஆவது பிரிவை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கை, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஆர்.நாரிமன், ஏ.எம்.கான்வில்க்கர், டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகிய ஐந்து நீதிபதீகள் அடங்கிய அரசமைப்புச் சட்ட அமர்வு விசாரித்தது.
இந்த வழக்கின் விசாரணையில், ஐபிசி 497ஆவது பிரிவு நீடிக்க வேண்டும் என்றும், அது திருமண உறவின் புனிதத்தை பாதுகாக்கிறது என்றும் மத்திய அரசு வாதிட்டது. இந்திய சமூகத்தின் கட்டமைப்பு மற்றும் கலாச்சாரத்தை கருத்தில் கொண்டு, இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது என்றும், கள்ளத் தொடர்பை குற்றம் இல்லை என்று ஆக்குவது திருமண பந்தத்தை பலவீனப்படுத்துவதாக அமைந்துவிடும் என்றும் மத்திய அரசு வாதிட்டது.
இருப்பினும், விசாரணையின் போது பெண்ணின் கணவர் ஒப்புதலுடன் உறவு நடைபெற்றால், தண்டனைக்குரியது அல்ல என்று வரையறுக்கும் இந்தச் சட்டம் எப்படி புனிதத்தை பாதுகாக்கும் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
இந்நிலையில், 5 நீதிபதிகள் அமர்வு 4 தீர்ப்புகளை வாசித்தது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவும், நீதிபதி ஏ.எம்.கான்வில்க்கரும் எழுதிய தீர்ப்பு முதலில் வாசிக்கப்பட்டது. அடுத்து மற்ற 3 நீதிபதிகளும் தங்கள் கருத்துகளுடன் தீர்ப்புகளை எழுதினர்.
இருப்பினும் 5 நீதிபதிகளும், கள்ளத்தொடர்பு என்பது தண்டனைக்குரிய குற்றம் அல்ல என்ற தீர்ப்பை கருத்து ஒற்றுமையுடன் வழங்கினர்.
கணவர் என்பவர், மனைவியின் எஜமானர் இல்லை என்றும், பெண்ணின் சமத்துவம் மற்றும் கண்ணியத்துக்கு எதிரான எந்த சட்டப் பிரிவும் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்றும் தலைமை நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டார்.
அதேநேரம் கள்ள உறவு என்பது விவாகரத்து செய்வதற்கான அடிப்படையாக நீடிக்கும் என்று 5 நீதிபதிகள் அமர்வு தெளிவுபடுத்தியது.




