மத்திய மாநில அரசுகளின் வரிக் குறைப்பை அடுத்து, 13 மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை 5 ரூபாய் குறைந்துள்ளது.
பெட்ரோல், டீசல் லிட்டருக்கு ரூ.2.50 குறைப்பதாக மத்திய அரசு அறிவித்ததை அடுத்து பல்வேறு மாநில அரசுகளும் வரிக் குறைப்பு செய்துள்ளன. இதனால் 13 மாநிலங்களில் நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் வரை குறைந்துள்ளது.
கணக்கே தெரியாத அளவில் சிறிது சிறிதாக ஏற்றம் கண்ட பெட்ரோல் டீசல் விலையை மத்திய, மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரி வந்தனர். இந்நிலையில், பெட்ரோல் டீசல் லிட்டருக்கு ரூ.2.50 குறைப்பதாகவும், இந்த விலை மாற்றம் நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்றும் அருண் ஜேட்லி நேற்று அறிவித்தார்.
மேலும், இதே அளவுக்கு மாநில அரசுகளும் வாட் வரிகளைக் குறைக்க வேண்டும்! பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்திய எதிர்க்கட்சிகள் தாங்கள் ஆளும் மாநிலங்களில் இப்போது விலைக் குறைப்பை அமல்படுத்தட்டும் என்றார் அருண் ஜேட்லி.
இதை அடுத்து, பாஜக ஆளும் உத்தராகண்ட், சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம், அஸ்ஸாம், இமாச்சலப் பிரதேசம், மகாராஷ்ட்ரா, குஜராத், திரிபுரா , ஜார்க்கண்ட் , கோவா, ஹரியானா, ராஜஸ்தான், அருணாசலப்பிரதேசம் ஆகிய 13 மாநிலங்களில் பெட்ரோல் டீசல் விலையில் ரூ.2.50 வரை வாட் வரி குறைக்கப்பட்டது. இதனால் அந்த மாநிலங்களில் நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் வரை குறைந்துள்ளது.
விரைவில் 4 மாநில சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அச்சத்தின் காரணமாக மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்திருப்பதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா குற்றம் சாட்டியிருக்கிறார்.




