விமானத்தை இயக்கியபோது எஞ்ஜினில் சிக்கி தொழில்நுட்ப ஊழியர் பலி

மும்பை:
மும்பையில் ஏர்-இந்தியா விமான என்ஜினில் எதிர்பாராதவிதமாக சிக்கி தொழில்நுட்ப ஊழியர் ஒருவர் புதன்கிழமை உயிரிழந்தார்.
மும்பை விமான நிலையத்தில் ஏர் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான ஏ.ஐ.619 விமானம், ஆந்திர மாநிலம் ஹைதராபாத்துக்குச் செல்வதற்காக புதன்கிழமை மாலை நிறுத்தப்பட்டிருந்தது. விமானம் புறப்படத் தயாராக இருந்தபோது, தொழில்நுட்ப ஊழியர் ஒருவர் விமானத்தைக் கடந்து சென்றார். அப்போது, விமான எஞ்ஜினின் ஈர்ப்பு விசையில் சிக்கி அவர் அதனுள் எதிர்பாராதவிதமாக உள்ளிழுக்கப்பட்டு உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து வேதனை தெரிவித்துள்ள விமான துறை அதிகாரிகள், இது குறித்து உரிய விசாரணை நடத்தப் படும் என்று கூறினர்.