எம்.பி.க்களின் சம்பளம் இரு மடங்கு உயர்த்தப்படும்: மத்திய அரசு முடிவு

புது தில்லி:

நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு தற்போது வழங்கப் படும் சம்பளம் இரு மடங்காக உயர்த்தப் படவுள்ளது. அவர்கள் தற்போது மாத சம்பளமாக ரூ.50 ஆயிரமும் தொகுதி படியாக ரூ.45 ஆயிரமும் பெறுகின்றனர். மேலும், உதவியாளர் மற்றும் அலுவலக படியாக கூடுதலாக ரூ.45 ஆயிரம் பெறுகின்றனர். இது மத்திய அமைச்சரவைச் செயலாளருக்கு வழங்கப்படும் சம்பளம்.

இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதிய கமிஷன் பரிந்துரைகள், வருகிற 1-ந்தேதி (ஜனவரி) முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இதில் மத்திய அமைச்சரவைச் செயலாளருக்கான சம்பளம் ரூ.2.50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே இதற்கு இணையான சம்பளத்தை எம்.பிக்களுக்கு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் படி எம்.பிக்கள் தற்போது பெறும் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் சம்பளத் தொகை ரூ.2 லட்சத்து 80 ஆயிரமாக அதாவது 2 மடங்காக உயருகிறது.

இது தொடர்பான பரிந்துரையை நாடாளுமன்ற கூட்டுக் குழு மத்திய நிதி அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளது. இதனை நிதி அமைச்சகமும் ஏற்றுக் கொள்ளும் என்று தெரிகிறது. இதேபோல எம்.பி.க்களுக்கான ஓய்வூதியமும் 2 மடங்காக உயர்த்தப்பட உள்ளது.