ராமர் கோவில் கட்ட இஸ்லாமியர்கள் உதவவேண்டும் என அழைப்பு விடுத்த அமைச்சர் நீக்கம்

லக்னோ:

‘கோவில் கட்ட இஸ்லாமியர்கள் உதவவேண்டும்’ என்று அழைப்பு விடுத்த உ.பி. அமைச்சர் நீக்கப்பட்டார்

இஸ்லாமியர்கள் அயோத்தியா, மதுரா மற்றும் காசியில் விட்டுகொடுத்து கோவில்கட்ட உதவிசெய்ய வேண்டும் என்று உ.பி. அமைச்சர் ஓம்பால் நெக்ரா அழைப்பு விடுத்தார்.

உத்தரபிரதேச மாநில அமைச்சர் ஓம்பால் நெக்ரா நேற்று மாலை பிஜ்னோரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த அழைப்பினை விடுத்தார். இந்நிலையில் மாநில முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் இன்று காலை அமைச்சரவையில் இருந்து நீக்கி உத்தரவிட்டு உள்ளார். 

நெக்ரா பேசுகையில், “அயோத்தியில் இல்லாமல் வேறுஎங்கு ராமர் கோவில் கட்டுவது? அயோத்தியில் ராமர் கோவில் கட்டவும், மதுராவில் கிருஷ்ணா கோவில் கட்டவும் இஸ்லாமியர்கள் உதவிசெய்யவேண்டும், அங்குள்ள மசூதிகளில் கோரிக்கையை விடவேண்டும். உண்மையில் நான் சொல்கின்றேன், இஸ்லாமியர்கள் ராமர் கோவில் கட்ட கர சேவாவில் இணையவேண்டும்,” என்று கூறிஉள்ளார். 

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் திட்டத்துக்காக விசுவ இந்து பரிஷத் சேகரித்த கற்கள், சமீபத்தில் 2 லாரிகளில் அயோத்திக்கு வந்து சேர்ந்தன. அங்கு நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ராமர் கோவில் கட்ட புதியதாக அங்கு கற்கள் வந்து இறங்கியது சர்ச்சையை ஏற்படுத்திஉள்ளது. இதனை குறிப்பிட்டு அமைச்சர் இக்கருத்தினை தெரிவித்து உள்ளார்.