
ஆசியாவின் 2வது மிகப் பெரிய பாலத்தை பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார்.
வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில், கடந்த 2002 ஆம் ஆண்டில் போகிபீல் பாலம் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. 1997 ஆம் ஆண்டு எச்.டி.தேவேகவுட பிரதமராக இருந்த போது, இந்தப் பாலத்துக்கு அடிக்கல் நாட்டப் பட்டது.
ஆனாலும் மத்தியில் நிலையான அரசு அமையாமல் பிரதமர்கள் வருவதும் போவதுமாய் இருந்ததால், திட்டம் கிடப்பிலேயே போடப்பட்டது. பின்னர் அடல் பிஹாரி வாஜ்பாயி பிரதமராக வந்த பின்னர், இந்தத் திட்டத்தின் முக்கியத்துவம் கருதி, பணிகளைத் தொய்வின்றித் தொடர ஆர்வம் காட்டினர். வாஜ்பாயியால்தான் இந்தப் பாலத்துக்கான திட்டப் பணிகள் தொடங்கப்பட்டு, முழு வீச்சில் வேகம் பெற்றன.

இருப்பினும், பின்னர் வந்த மன்மோகன் சிங் ஆட்சியில் ஏற்பட்ட ஊழல்கள், பணிகளில் தொய்வு, மற்றும் பிரம்மபுத்திரா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு இவை போன்ற காரணங்களால், இந்த மாபெரும் பாலத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைவதில் தாமதம் ஏற்பட்டது.
அருணாச்சலப் பிரதேச எல்லையை ஒட்டி 3200 கோடி ரூபாய் மதிப்பில் கட்ட திட்டமிடப்பட்ட பாலம் 5900 கோடி ரூபாய் செலவில் ரயில் மற்றும் சாலை போக்குவரத்துக்காக ஈரடுக்குப் பாலமாக தற்போது கட்டி முடிக்கப்பட்டுள்ளது பெரும் சாதனைதான்!
கடந்த டிசம்பர் 3ஆம் தேதி இந்தப் பாலத்தில் சரக்கு ரயில் வெள்ளோட்டம் விடப்பட்டது. இந்தப் பாலம் பிரம்மபுத்திரா நதியின் மேலே சுமார் 3.2 கி.மீ செல்கின்றது.

திட்டம் தொடங்கப்பட்ட போது 4.31 கி.மீ., தொலைவுஆக இருந்தது, பின்னர், 4.94 கிலோ மீட்டர் கொண்டதாக மாறியது. இந்த போகிபீல் பாலம், மூன்று வழி சாலையாகவும், கீழ் பகுதியில் இரண்டு வழி ரயில் பாதையுடன் அமைக்கப்பட்டுள்ளது.
போகிபீல் எனப்படும் இந்தப் பாலத்தை தன் அரசியல் குரு அடல் பிஹாரி வாஜ்பாயி பிறந்த நாளான இன்று பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். பின்னர் பாலத்தில் சிறிது தொலைவுக்கு நடந்து சென்ற பிரதமர், அருகில் இருந்த மக்களை நோக்கி உற்சாகமாக கையசைத்தார். பாலத்தில் காரில் சென்றும் பிரதமர் பார்வையிட்டார்.
இன்று திறக்கப் பட்ட இந்தப் பாலமே நம் நாட்டின் முதல் நீளமான பாலம் என்பதும் இது ஆசியாவின் இரண்டாவது நீளமான பாலம் என்பதும் இதன் சிறப்புகள்.
சீன எல்லை அருகே அமைந்துள்ளதால் பாதுகாப்பு காரணங்களுக்காக ராணுவ டேங்குகள் சென்றாலும், போர் விமானங்கள் தரையிறங்கினாலும் தாங்கும் வல்லமையுடன் இந்தப் பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்தப் பாலத்தால் 170 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுற்றிச் செல்ல வேண்டிய நிலை தவிர்க்கப்பட்டுள்ளது.

மேலும், பயண நேரமும் 4 மணி நேரம் குறைந்துள்ளது. பாலத்தின் அடியில் இரு வழி ரயில் பாதையும், பாலத்தில் மூன்று வழி சாலை பாதையும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தில்லி – திப்ரூகர் இடையிலான ரயில் பயண நேரம் மூன்று மணி நேரம் குறையும். பராமரிப்புச் செலவைக் குறைக்கும் விதத்தில் ஐரோப்பிய தொழில்நுட்பத்தில் முழுவதும் வெல்டிங் முறையில் போகிபீல் பாலம் கட்டப்பட்டுள்ளது.
போகி பீல் ஈரடுக்கு பாலத்தில் பிரதமர் நரேந்திரமோடி முதல் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார். டின்சுகியா – நாகர்லாகுன் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் வாரத்திற்கு 5 நாள் இந்த வழித்தடத்தில் இயக்கப்படுகிறது.
பாஜக.,வின் முதல் பிரதமர் வாஜ்பாயால் தொடங்கப்பட்டு, அடுத்த சாதனைப் பிரதமர் மோடியால் சுமார் 16 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு கட்டி முடிக்கப்பட்டு திறக்கப் பட்டுள்ள பாலத்தைக் காண்பதற்கு பெருமளவில் மக்கள் திரண்டிருந்தனர்.



