
சபரிமலை விவகாரத்தில் கேரள முதல்வர் பிணராயி விஜயன் இப்பொழுது புதிய விவாதத்தை உருவாக்கியிருக்கிறார்
சபரிமலையில் நடுத்தர வயதுப் பெண்கள் இருவர் நுழைந்த விவகாரத்தில் சபரிமலை மரபுகளும் பாரம்பரியமும், புனிதத் தன்மையும் மீறப் பட்டதாகக் கூறி, சபரிமலை தலைமை தந்திரி உடனடியாக கோயில் நடையை அடைத்து பரிகார பூஜைகளை மேற்கொண்டார்
இதனால், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அவர் நடந்ததாக புகார்கள் கூறப் பட்டன! கேரளத்தைச் சேர்ந்த ஆளுங்கட்சியினர் இந்த விவகாரத்தை எழுப்பினர். பாலின சமத்துவத்தை முன்னிறுத்திய உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் விதத்தில் சபரிமலை தலைமை தந்திரி செயல்பட்டதாக அவர்கள் கூறினர்
பெண்கள் அனைவரும் சபரிமலைக்கு செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறிய நிலையில் அவ்வாறு வந்த பெண்களை இழிவுபடுத்தும் நோக்கில் சபரிமலை சந்நிதியை தந்திரி அடைத்ததாக புகார்கள் எழுப்பப்பட்டன
இதை முன்னிறுத்தி கேரள முதல்வர் பிணராயி விஜயன் ஒரு கருத்தை தெரிவித்தார்! தலைமை தந்திரி அந்தப் பொறுப்பில் இருந்து வெளியேற வேண்டும்; உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வில்லை என்றால் ஏன் அவர் அந்த பொறுப்பில் இருக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்
மேலும் அவர் கூறியுள்ள இன்னொரு கருத்து, பலத்த விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது! இது திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு அமைப்பை சேர்ந்த கோவில். திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு சபரிமலையில் என்ன செய்ய வேண்டும் எப்பொழுது திறக்க வேண்டும், மூட வேண்டும் என்பதை முடிவு செய்யும்! அதனை தந்திரி முடிவு செய்யக்கூடாது என்று பிணராயி விஜயன் கூறி இருப்பது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
முன்னதாக, சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்கள் தரிசனம் செய்ததால் கோயிலை மூடி பரிகார பூஜை செய்யப்பட்ட விவகாரத்தில், நீதிமன்ற உத்தரவை மீறி பரிகார பூஜைக்கு ஏற்பாடு செய்த தந்திரி மீது நடவடிக்கை எடுக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப் பட்டது. இந்த வழக்கை, அவசர வழக்காக விசாரிக்கக் கோரிய நிலையில், அதனை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது..