பஞ்சாப் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் அசத்தல்

புணே: ஐபிஎல் சீசன் 8 தொடரில், கிங்ஸ் லெவன் பஞ்சாபுக்கு எதிராக வெள்ளிக்கிழமை நடைபெற்ற மூன்றாவது லீக் ஆட்டத்தில் ஜேம்ஸ் ஃபாக்னரின் அசத்தலான பேட்டிங் மற்றும் பந்துவீச்சினால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் ஜார்ஜ் பெய்லி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, பேட்டிங்கை தொடங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. இதில் 21 எக்ஸ்ட்ராஸ்களும் அடங்கும். பஞ்சாப் தரப்பில் அனுரீத் சிங் 3 விக்கெட்டுகளும் ஜான்சன் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். அந்த அணியில் ஹூடாவும் (30 ரன்கள், 15 பந்து, 3 சிக்ஸர்), ஜேம்ஸ் ஃபாக்னரும் அதிரடியாக விளையாடினர். குறிப்பாக அனுரீத் சிங் வீசிய 19-ஆவது ஓவரில் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என ஃபாக்னர் வெளுத்து வாங்கியதால் அந்த ஓவரில் மட்டும் 20 ரன்கள் கிடைத்தது. ஆனால் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஃபாக்னர் கடைசி ஓவரில் மில்லரிடம் கேட்ச் கொடுத்தார். அவர் 46 ரன்கள் (33 பந்து, 2 பவுண்டரி 3 சிக்ஸர்) சேர்த்து ஆட்டமிழந்தார். 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தனது இன்னிங்ஸை தொடங்கிய பஞ்சாப் அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அதிரடி தொடக்க வீரர் வீரேந்தர் சேவாக் முதல் பந்திலேயே டக்அவுட் ஆனார். மற்றொரு தொடக்க வீரரான முரளி விஜய் தனது பங்குக்கு 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 37 ரன்கள் (32 பந்து) எடுத்த நிலையில் ரன் அவுட்டில் வெளியேறினார். இதுவே பஞ்சாப் அணி வீரர்களில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன். தொடர்ந்து விக்கெட்கள் சரிந்ததால், 13 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 92 ரன்களை எடுத்திருந்தது. அடுத்த ஓவரிலேயே மில்லர் (23 ரன்கள்) விளாசிய பந்தை ஃபாக்னர் கேட்ச் பிடித்தார். இதன் பின்னர் பஞ்சாப் அணி தடுமாறத் தொடங்கியது. இதனால், 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் 8 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ராஜஸ்தான் 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்தத் தொடரில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது. அசத்தலாக விளையாடிய ஃபாக்னர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.