புதிய பாகிஸ்தான், பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுத்துக் காட்டட்டும்!

இந்தியா சற்றுமுன்

raveesh kumar - 2026

இந்திய விமானப்படையின் 2வது போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கான ஆதாரம் எங்கே என்று பாகிஸ்தானுக்கு இந்திய வெளியுறவுத்துறை கேள்வி எழுப்பியுள்ளது.

பிப்.26ஆம் தேதி, இந்திய வான் எல்லைக்குள் அத்துமீறிப் பறந்த பாகிஸ்தானின் எஃப்-16 போர் விமானங்கள் விரட்டியடிக்கப்பட்டன! அத்துடன், அதில் ஒரு விமானமும் சுட்டு வீழ்த்தப்பட்டது.

வான் எல்லையில் நடைபெற்ற இந்த சண்டையின்போது இந்தியாவின் மிக்-21 பைசன் ரக விமானம் ஒன்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் விழுந்தது. அதில் தான் விமானி அபிநந்தன் சென்றதாகத் தெரியவருகிறது.

ஆனால் இந்தியாவின் 2 போர் விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதாகவும், இரண்டாவது விமானத்தை சுட்டு வீழ்த்திய வீடியோ ஆதாரம் தங்களிடம் இருப்பதாகவும் கூறிவந்தது.

இந்நிலையில், தில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஸ் குமார், இரண்டாவது விமானத்தை வீழ்த்தியதற்கு வீடியோ பதிவு இருக்குமானால், அதை ஏன் சர்வதேச ஊடகங்களிடம் பாகிஸ்தான் கொடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் அவர் கூறிய போது, இந்திய வான் எல்லையில் பாகிஸ்தான் எஃப்-16 ரக போர் விமானங்களை பயன்படுத்தியதற்கு சாட்சிகளும், எலெக்ட்ரானிக் ஆதாரங்களும் உள்ளன.

இந்தியாவுக்கு எதிராக எஃப்-16 விமானங்களை பாகிஸ்தான் பயன்படுத்தியது, விமான கொள்முதல் ஒப்பந்த விதிகளை மீறிய செயலா என ஆராயுமாறு அமெரிக்காவை கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

தற்போது புதிய சிந்தனையுடன் கூடிய புதிய பாகிஸ்தான் என அந்நாடு கூறிக் கொள்ளுமேயானால், பயங்கரவாதக் குழுக்கள் மற்றும் எல்லை கடந்த பயங்கரவாதத்திற்கு எதிரான புதிய நடவடிக்கைகள் மூலம் அதைக் காட்ட வேண்டும்!

புல்வாமா தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது இயக்கமே பொறுப்பேற்றுக் கொண்ட பின்னும் கூட, அதை மறுப்பதன் மூலம், பயங்கரவாத அமைப்பை பாகிஸ்தான் பாதுகாக்க முயற்சிக்கிறதா!?

பாகிஸ்தானில் ஜெய்ஷ்-இ-முகமது பயிற்சி முகாம்கள் செயல்படுகின்றன என்பதும், அதன் தலைவர் மசூத் அசார் பாகிஸ்தானில் இருப்பதும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெற்றுள்ள நாடுகள் அனைத்தும் அறிந்த ஒன்றுதான்!, எனவே மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகளை கேட்டுக் கொள்கிறேன்.

இந்தியா-பாகிஸ்தான் இடையே, கர்தார்பூர் சிறப்பு வழித்தடம் அமைக்கும் நடவடிக்கை என்பது, இரு தரப்பு உறவுகள் மீண்டுள்ளதை எந்த வகையிலும் குறிப்பதாகாது.

இந்தியா நடத்திய ராணுவ ரீதியில் அல்லாத, பயங்கரவாத எதிர்ப்பு தாக்குதலின் நோக்கம் திட்டமிட்டபடி நிறைவேறியது.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிராக திட்டவட்டமான நடவடிக்கை எடுப்பது என்ற இந்தியாவின் உறுதியை இது வெளிப்படுத்துகின்றது என்றார் ரவீஸ் குமார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.