ராகுலின் ஆன்மிகப் பயணம்: கேதார்நாத் கோவிலில் தரிசனம்

டேராடூன்: சுமார் 2 மாத கால நீண்ட விடுமுறையைத் தொடர்ந்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேற்று ஆன்மிகப் பயணமாக கேதர்நாத் கோவிலுக்கு புறப்பட்டுச் சென்றார். தனது 56 நாள் ஓய்வுக்குப் பின்னர் ஏப். 16ஆம் தேதி தில்லி திரும்பிய ராகுல் காந்தி, பின்னர் ஏப். 19ல் தில்லியில் நடைபெற்ற விவசாயிகள் பேரணியில் கலந்து கொண்டார். அந்த சூட்டோடு, நாடாளுமன்ற கூட்டத் தொடரிலும் பங்கேற்று, நிலம் கையகப்படுத்தும் சட்டத்துக்கு எதிராகப் பேசினார். இந்நிலையில் ராகுல்காந்தி திடீரென தனது ஆன்மிகப் பயணத்தைத் தொடங்கியுள்ளார். சிவபெருமானின் 12 ஜோதிர் லிங்கத் தலங்களில் ஒன்றான புனிதம் வாய்ந்த 11ஆவது ஜோதிர்லிங்கம் அமைந்துள்ள தலம் கேதர்நாத். இந்தத் தலத்துக்கு அவர் நேற்று புறப்பட்டுச் சென்றார். தில்லியில் இருந்து விமானம் மூலம் சென்ற அவர், டேராடூன் விமானநிலையத்தை காலை வந்தடைந்தார். அவரை மாநில முதல்ஜ்ஜ்வர் ஹரீஷ் ராவத் மற்றும் கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர். 2013இல் கேதார்நாத்தில் நடந்த மழை வெள்ளத்தில் கேதார்நாத் கோவில் பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டது. தற்போது அங்கு மேற்கொண்டுள்ள சீரமைப்பு பணிகள் பற்றிய படங்களை ராகுல்காந்தி பார்வையிட்டார். பின்னர், ஜாலிகிராண்ட் விமானநிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கௌரிகுண்ட் பகுதிக்குப் புறப்பட்டார். அங்குள்ள லின்சோலி பகுதியில் இருந்து கேதார்நாத் செல்லும் ராகுல், இன்று சுவாமி தரிசனம் செய்கிறார்.